அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்; திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி பேட்டி... எங்கிருந்தாலும் வாழ்க; டிடிவி தினகரன்

சென்னை: தொண்டர்களை அரவணைத்து செல்லும் சிறந்த தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பார்ப்பதாக செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து கொண்டார். இதனையடுத்து பேட்டியளித்த அவர், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார். கரூர் மக்களின் விருப்பத்துக்கு இணங்கவே தான் திமுகவில் இணைந்ததாக விளக்கம் அளித்தார்.

மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சராக்க மக்கள் தயாராக உள்ளனர் என்றும், கடந்த ஒரு மாதமாக அமமுகவின் எந்த செயல்பாட்டிலும் தான் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். திமுகவில் சேருவது குறித்து ஒரு மாதத்துக்கு முன்பே முடிவு செய்துவிட்டதாகவும், அமமுக நிர்வாகிகள் பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தம்முடன் பணியாற்றியவர்களை விமர்சிப்பது பண்பு ஆகாது என்று அண்ணா அறிவாலயத்தில் பேட்டியளித்தார். ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக ஒரு மூழ்கும் கப்பல் என்று விமர்சித்தார்.

டிடிவி தினகரன் பேட்டி

அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து சென்னை பெசன்ட் நகரில் டிடிவி தினகரன் பேட்டியளித்தார். அப்போது ஜெயலலிதாவிடம் செந்தில் பாலாஜி பெயரை 2006-ல் பரிந்துரை செய்ததாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 4 மாதத்துக்கு முன்பே கட்சி பணியில் இருந்து விலகி இருப்பதாக செந்தில் பாலாஜி கூறினார் என்று தெரிவித்தார். எங்கிருந்தாலும் வாழ்க என செந்தில் பாலாஜிக்கு டிடிவி தினகரன் அளித்த பேட்டியில் வாழ்த்து தெரிவித்தார். செந்தில் பாலாஜி கட்சியை விட்டு சென்றதில் எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்த டிடிவி, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல் முறையீடு கிடையாது என்று உறுதியுடன் தெரிவித்தார்.

திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி

அமமுகவில் இருந்து விலகி செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைவதற்கான படிவத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து கொண்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: