அமமுகவில் இருந்து விலகி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் செந்தில் பாலாஜி

சென்னை: அமமுகவில் இருந்து விலகி செந்தில் பாலாஜி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மேலும் அவரது ஆதரவாளர்களும் திமுகவில் இணைத்து கொண்டனர். திமுகவில் இணைவதற்கான படிவத்தில் செந்தில் பாலாஜி கையெழுத்திட்டு மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் செந்தில் பாலாஜி இணைந்து கொண்டார். தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி.தினகரன் ஆதரவு 18 எம்எல்ஏக்களில் ஒருவர் அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி. அமமுகவில் தினகரனுக்கு அடுத்த இடத்திலும், அவருக்கு பக்க பலமாகவும் இருந்தவர்.

அமைப்பு செயலாளர், கரூர் மாவட்ட செயலாளர் பதவிகளை வகிக்கிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்போவதில்லை என்று தினகரன் திட்டவட்டமாக கூறினார். ஆனால் 18 பேரில் சிலர் இடைத்தேர்தலை சந்திக்க பணம் இல்லை. இதனால் மேல்முறையீடு செய்வோம் என்றனர். இதே கருத்தைதான் செந்தில் பாலாஜியும் வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் எதையும் தினகரன் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. இதனால் செந்தில் பாலாஜி அதிருப்தி அடைந்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த துவங்கினார். மூன்று மூன்று பேராக தனது அறைக்கு அழைத்து அவர்களிடம் கருத்து கேட்டார். இதில் திமுகவில் சேரலாம் என செந்தில் பாலாஜி கூறியதாகவும், இதை ஆதரவாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியது. இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் அவருடன் பல ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: