ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நியமனம் எதிர்த்து முக்கிய கட்சிகள் வழக்கு தொடர முன்வர வேண்டும்: வைகோ அழைப்பு

சென்னை: மதிமுக பொதுசெயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: ரிசர்வ் வங்கி இந்தியாவின்  எதார்த்தத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் விடாப்பிடியாக நிற்கிறது என்று தெரிவித்த அஸ்வினி மகாஜன், சுமார் 3 லட்சத்து 52 ஆயிரத்து 784 கோடி ரூபாய் மதிப்பிலான ரிசர்வ் வங்கி கருவூலப் பணத்தின் உபரியை மத்திய அரசு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதன் மூலம் முதலீடு செய்யப்பட்டு பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு ஆலோசனை கூறினார். நாட்டின் தன்னிச்சையான அமைப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் கூட்டம் ஆதிக்கம் செலுத்துகிறது.  

பா.ஜ அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மோதல்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை விட்டு வெளியேறுவதற்கு அடிப்படை காரணங்கள் ஆகும். பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் சக்திகாந்த தாஸ், தற்போது நடைபெற்று வரும் ஜி.20 மாநாட்டில் மத்திய அரசின் சார்பில் கலந்துகொள்ள அனுப்பப்பட்டார். தற்போது ரிசர்வ் வங்கியின் 25வது ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்குகூட தெரியாமல் மோடி அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் சக்திகாந்த தாஸ். சுயேச்சையாக இயங்க வேண்டிய ரிசர்வ் வங்கியை ஆர்.எஸ்.எஸ். காவிப்படை கைப்பற்றி உள்ள நிலையில், சக்திகாந்த தாஸ் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

 

120 கோடி மக்களின் காக்கும் கருவூலமான ரிசர்வ் வங்கியை சீர்குலைத்து, நாட்டின் பொருளாதாரத்தை நிரந்தரமாக நாசமாக்கும் அக்கிரமமான முயற்சியில் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டுள்ளது. 2019 மே மாதம் பா.ஜ தலைமையிலான அரசு அமைய ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லாத நிலையில், போகிற போக்கில் இந்த அழிவு வேலையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. மோடியின் கைப்பாவையான சக்திகாந்த தாஸ் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் நிர்வாக ஆலோசனைக் குழுவில் கடந்த ஓராண்டில் நியமிக்கப்பட்டவர்கள் நீக்கப்பட வேண்டும். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் இந்தியாவின் முக்கிய அரசியல் கட்சிகள் வழக்குத் தொடுக்க முன்வரவேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: