5 மாநில சட்டமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி: எம்பி தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்கக்கூடாது: இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு அதிமுக முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தல்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அதிமுக முன்னணி நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ஐந்து மாநில பேரவை தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி ெபற்று ஆட்சி அமைக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜ ஆட்சி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ெதலங்கானா, மிசோராமிலும் படுதோல்வியை சந்தித்தது.  இன்னும் 4 மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால், இந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு முன்னோட்டமாக கருதப்பட்டது. அதன்படி தற்போது சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஏற்பட்ட தோல்வி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுகவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற ஒரு பரவலான கருத்து கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு மத்திய பாஜ அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு எந்த சலுகையும் அளிக்காமல் புறக்கணித்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்புகூட இதுவரை மத்திய அரசு எந்தவித நிவாரண உதவியும் வழங்காமல் உள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில்தான் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மூன்று நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெற்றபோது 5 மாநில தேர்தல் முடிவுகளும் வெளியானது. இதில் பாஜ தோல்வி அடைந்ததால், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இது எதிரொலித்தது.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள், மத்திய அரசு தமிழக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. அதனால் எக்காரணத்தை கொண்டும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடாது என்ற கருத்தையே வலியுறுத்தினர். பிரதமர் மோடியின் செல்வாக்கு தொடர்ந்து சரிந்து வருவது சட்டமன்ற தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாம் ஏன் பாஜகவுடன் கூட்டணி சேர்த்து, தமிழகத்தில் அந்த கட்சியை வளர்த்து விட வேண்டும். அப்படி செய்தால், அது சப்பானி குழந்தையை நாம் தூக்கி சுமந்ததாக மாறி விடும் என்றனர்.அதேபோன்று, மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கடந்த சில மாதங்களாக பாஜவுக்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரும், கடந்த சில நாட்களாக மத்திய பாஜ அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அவர் கூறும்போது, கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழக அரசு நிதியில் இருந்துதான் நிதி ஒதுக்கப்பட்டு செலவு செய்யப்படுகிறது. மத்திய அரசு இதுவரை ஒரு பைசாகூட தரவில்லை. தமிழக பாஜ தலைவர் தமிழிசை வாழைப்பழ கதை போல், அதுதான் இது, இதுதான் அது என்று கூறி மக்களை குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து நிற்கும் அளவுக்கு பலம் உள்ளது. கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று மறைமுகமாக பாஜவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக முக்கிய நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் பாஜவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடமும் வலியுறுத்தி வருகின்றனர். முன்னணி தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேருவதில் ஆர்வம் காட்டாததால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜ கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இது தமிழக பாஜ தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: