தமிழகம் முழுவதும் 1,324 அரசு பள்ளிகளை மூடுவதைவிட மாதிரி பள்ளிகளாக மாற்றலாம்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: பத்துக்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 1,324 பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க அரசு தீர்மானித்துள்ளது. இத்தகைய நிலை ஏற்படுவதற்கு அரசு தான் காரணம் என்பதை உணர மறுக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த பள்ளிகளில் மாணவர்கள் சேர மறுப்பது தான் அவை மூடப்படுவதற்கு காரணம் என்றும், அந்தப் பள்ளிகளை மூடக்கூடாது என்று வாதிடும் அரசியல்கட்சித் தலைவர்கள் அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க யோசனைகளை தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை விட அபத்தமான அணுகுமுறை இருக்க முடியாது. மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட வேண்டும் என்பது தான் அமைச்சரின் நோக்கமாக இருக்கிறதே தவிர, அவற்றில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை.

இந்த அவலத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். தொடக்கப்பள்ளிகள் என்றால் 5 வகுப்புகளுக்கும் 5 வகுப்பறைகள், அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்கள், கழிப்பறைகள் ஆகிய அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் மாணவர்கள் சேர முன்வரவில்லை என கூப்பாடு போடுவதால் எந்த பயனுமில்லை.மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடுவதற்கு பதிலாக அவற்றை அனைத்து வசதிகளும் கொண்ட மாதிரி பள்ளிகளாக மாற்ற வேண்டும். இதற்கான நிதியை தாராளமாக ஒதுக்க வேண்டும். அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அடுத்த சில ஆண்டுகளில் இப்பள்ளிகள் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: