அரசுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக எடப்பாடி ராஜினாமா செய்திருக்க வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கும் நீதிமன்ற தீர்ப்புகளால் எடப்பாடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.  நெல்லை மாவட்ட அதிமுக பிரமுகரும், தொழில் அதிபருமான அய்யாதுரை பாண்டியன் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்திற்கு வந்து திமுக தலைவரும் எதிர் கட்சி தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 3000 பேர் திமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு வந்தவர்களை திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிபா பத்பநாபன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அய்யாதுரை பாண்டியன் 10 லட்சம் தேர்தல் நிதியாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  அய்யாதுரை என்றுதான் கலைஞர் எனக்கு முதலில் பெயர் வைத்தார். இதில் அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாவையும் குறிக்கும். அதன்பிறகு ரஷ்ய தலைவர் ஸ்டாலின் மறைந்தார் என்பதால் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்தார். இன்று தாய் கழகம் மற்றும்  பிறந்த வீட்டிற்கு வந்து இணைந்துள்ள அய்யாதுரை பாண்டியன் மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிகண்ணன் உள்ளிட்ட உங்கள் அனைவரையும் வருக வருக என்று அன்புடன் வரவேற்கிறேன். அதிமுகவிற்காக  அய்யாதுரை பாண்டியன் எந்த அளவு பாடுபட்டார்  என்பதை நான் ஏற்கனவே அறிந்திருக்கிறேன். அதை விட பல மடங்கு அதிகமாக திமுக வெற்றிக்காக  பாடுபடுவேன் என்று அவர் உறுதி அளித்துள்ளார். அவரது பணிக்கு நீங்கள் பக்க பலமாக இருப்பீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

இந்த அண்ணா அறிவாலயத்தில்  வரும் 16 ம் தேதி கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. அதற்கு இந்த நிகழ்ச்சி முன்னோட்டமாக அமைந்துள்ளது. பக்தர்களுக்கு எப்படி ஆலயமோ  அதேப்போன்றுதான் திமுகவின் திருத்தலம் அண்ணா அறிவாலயம். கலைஞர் எந்த உணர்வோடு வாழ்ந்து  காட்டினார் என்பதை  நம் மனதில் ஏந்தி கடமையாற்ற வேண்டும். திராவிட  இயக்கத்தை திமுக பேணி பாதுகாத்து வருகிறது. வெற்றி தோல்வி இரண்டையும் ஒன்றாக கருதி நாட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம்  திமுக. ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல, நாட்டு மக்களுக்காக பாடுபாட வேண்டும் என்பதற்காகத்தான் திமுகவை அண்ணா உருவாக்கினார். கடந்த தேர்தலில் 1 சதவீத வாக்கு  வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.

ஆனாலும் அதிக எம்எல்ஏகள் கொண்ட எதிர்கட்சி நாம்தான். நான் திமுக தலைவராக டெல்லி சென்றபோது என்னை அனைத்து கட்சி தலைவர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்று பேசினர். அதிலிருந்து திமுகவை எந்த அளவிற்கு கலைஞர் உருவாக்கி இருக்கிறார் என்பதை அறிய முடியும்.  தமிழ்நாட்டில் அதிக இடங்களில் பெற்று வெற்றி பெறும் கட்சி திமுகதான் என்று டெல்லி தலைவர்கள் சொல்லும் அளவிற்கு திமுக வளர்ந்திருக்கிறது. விரைவில் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும். அந்த தீர்ப்பை அடுத்து எடப்பாடி அரசு நிச்சயம் இருக்காது. அதில் தப்பித்தாலும் 20 தொகுதிக்கு இடைத் தேர்தல் வர இருக்கிறது.

அது தனியாக வருமா, எம்பி தேர்தலோடு வருமா அல்லது எம்எல்ஏ மற்றும் எம்பி தேர்தல் சேர்ந்து வருமா என்ற நிலை இருக்கிறது. எந்த தேர்தல் வந்தாலும் திமுக மிகப் பெரிய வெற்றியை பெரும். அனைத்து தரப்பு மக்களும் போராடுகின்றனர்.  கஜா புயலால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் மக்களை அதிமுக அரசு காப்பற்றவில்லை. இப்படி பட்ட ஆட்சி தொடர வேண்டுமா? இவர்களின் கவலை ஆட்சி தக்க வைப்பதுதான். அதற்காக மத்திய அரசுக்கு அடிமையாக மற்றும் எடுபிடியாக இருக்கின்றனர்.  இந்த அரசுக்கு எதிராக இன்று இரண்டு தீர்ப்பு வந்திருக்கிறது. கலைஞர்  புதிய தலைமை செயலகத்தை கட்டினார். அதை சின்னாபின்னமாக்கியதுடன் அதில்  ஊழல் என்று விசாரணை ஆணையம் போட்டார்கள். 7 ஆண்டுகளாக விசாரணை நடக்கவில்லை. ஆனால் அதற்கு பல கோடி செலவிட்டனர்.  

நாம் அவர்கள் மீது வழக்கு போடுவதால் இந்த வழக்கை மீண்டும் போட்டார்கள். அதை விசாரிக்க வேண்டிய  அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது. அதைபோல் சிலை திருட்டை கண்டுபிடிக்கும் அமைப்பின் அதிகாரி பொன்.மாணிக்கவேலை இந்த அரசு மாற்றியது. அவரை நீதிமன்றம் மீண்டும் நியமித்து. அவரது பதவி காலத்தை நீட்டித்தது. அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று இந்த அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. அந்த அதிகாரி பணியில் தொடர வேண்டும் என்று நீதிமன்றம் கூறிவிட்டது. மானம், சூடு, சொரணை உள்ள ஆட்சி என்றால் இந்த தீர்ப்புகளுக்காக இன்றே ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

அப்படி செய்திருந்தால் சொரணை உள்ள ஆட்சி என நம்பலாம். இப்படிப்பட்ட அலங்கோலமான ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. அதற்காக நாம் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, எம்எல்ஏக்கள் ராமசந்திரன், கு.க.செல்வம், தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா, பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: