சுயநலத்துக்காக விலகுபவர்களால் அமமுக முடங்கி விடாது: டிடிவி.தினகரன் ஆவேசம்

சென்னை: அமமுகவை விட்டு தங்கள் சுயநலனுக்காக விலகி செல்பவர்களால் கட்சி முடங்கிவிடாது என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.  அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமமுக ஆரம்பிக்கப்பட்ட இந்த 9 மாத காலத்தில், ஓர் அரசியல் இயக்கமாக நாம் அடைந்திருக்கும் அபார வளர்ச்சிக்கு இந்த தமிழகம்தான் சாட்சி. இரண்டு கோடி உறுப்பினர்களை சேர்ப்பது என்ற இலக்கைக் கொண்டு, தற்போது, ஒரு கோடியே இருபது லட்சத்தை அடைந்துள்ளது. மத்திய, மாநில அரசுகளை எதிர்த்துதான் இந்த வளர்ச்சியை பெற்றுள்ளோம். அச்சுறுத்தல்களையும், அராஜகங்களையும் எதிர்கொண்டுதான் இந்த அபார வளர்ச்சியை கண்டிருக்கிறோம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பழனிசாமி கூட்டத்திற்கு தோல்வியை தந்து ஒரு சுயேச்சையாய் வாகை சூடி நின்றோம்.

இந்த எழுச்சியை தடுக்கவும், மக்கள் பணியில் நமது முன்னேற்றத்தை முடக்கவும், முயற்சிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  துரோகிகளும், நம் எதிரிகளும் முழுமூச்சாகவும், தீவிரமாகவும் அதில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு சிலர் தங்கள் சுயநலனுக்காக தலைமையை விட்டு விலகுவதும், பின் மன்னிப்புக் கோரி இணைவதும் இயல்பான ஒன்றே. நெல்மணிகளோடு, களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது நிலத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும்தான். அவற்றைக் காலம் உரிய நேரத்தில் அடையாளம் காட்டிவிடும். ஒரு சில நபர்களோ, ஒரு சிறு குழுவோ தங்களின் சுயநலனுக்காக விலகிச் செல்வதால், கட்சியே முடங்கிவிடும் என்று நினைப்பார்களேயானால், அது, “பூனை கண் மூடினால் உலகம் இருண்டுவிடும்” என நினைப்பது போன்றது.

முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்த போகிறார்கள்?. ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முரணான எண்ணம் கொண்டவர்கள் விலகி நிற்பதே நலம். நமது நோக்கமும் சிந்தனையும், செயலும், துரோகத்தை வீழ்த்த கூடியதாக இருக்க வேண்டும். அமமுகவை யாராலும் தீண்டி பார்க்கவும் முடியாது, சீண்டி பார்க்கவும் முடியாது. அப்படி செய்தால், அது உயர் அழுத்த மின்சாரத்தை தொடுவதற்கு சமம். அதிமுகவையும், இரட்டை இலையையும் துரோகிகளிடமிருந்து மீட்டெடுப்போம். நாம் ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளது. தேர்தல் களங்களுக்கு ஆயத்தமாகி வெற்றிகளை குவித்திட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘கஜா புயல் துயரத்திலிருந்து இன்னும் நாம் மீளவில்லை. அதனால் இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுகோளில் இருந்த நியாயத்தை புரிந்து ஏற்றுக் கொண்ட அமமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் எனது நன்றி என டிவிட்டரில் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: