மூதாட்டி சடலத்தை ஆம்புலன்சில் எடுத்து செல்ல உதவுவது போல் நடித்து நகை, பணம் கொள்ளை

சென்னை: சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியை சேர்ந்தவர் குப்பாபாய் (80). இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 30ம் தேதி ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி அவர்  உயிரிழந்தார். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்ல அவரது மகள் ருக்குமணி ஏற்பாடு செய்துள்ளார். சடலத்தை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி செல்ல வாடகையாக 4 ஆயிரம் பணம் கேட்டுள்ளனர்.   அப்போது ராஜேஷ் என்பவர், ‘‘நான் போலீஸ்’’ என்று ருக்குமணியிடம் கூறியுள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் பேசி 2500 வாடகையை குறைத்துள்ளார். பின்னர் ருக்குமணியிடம், ‘‘நான் வந்து உடலை ஒப்படைக்கிறேன்’’ என கூறி, ஆம்புலன்சில் ஏறி எம்எம்டிஏவில் உள்ள குப்பாபாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் குப்பாபாய் உடலை உறவினர்கள் இறக்கியுள்ளனர். அப்போது குப்பாபாய் பயன்படுத்திய நகை மற்றும் பொருட்கள் அவர் தலை அருகே வைக்குமாறு கூறினார். அதன்படி ருக்குமணி இரண்டரை சவரன் செயின், 5 ஆயிரம் பணத்தை ஒரு துணியில் குப்பாபாய் தலை அருகே வைத்தனர். பின்னர் குப்பாபாய் உடலை அடக்கம் செய்ய உடலை எடுத்தபோது தலை அருகில் வைத்திருந்த செயின் மற்றும் பணத்தை காணாமல் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பார்த்தபோது போலீஸ் என்று கூறி உடன் வந்த நபரும் மாயமாகி இருந்தார்.  இதுகுறித்து ருக்குமணி அரும்பாக்கம் காவல்நிலையத்தில் ேநற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: