தகராறில் வழக்கு பதியாமல் இருக்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்ஐக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சென்னை திருமுல்லைவாயல். பெரியார் நகர் வெங்கடேஸ்வரா தெருவை சேர்ந்தவர் வடிவேலு. இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமி என்பவருக்கும் இடையே, கழிவுநீர் வீட்டு வாசலில் வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து துரைசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் வடிவேலு புகார் அளித்தார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்.இன்ஸ்பெக்டர் ஸ்டேன்லி ஜோன்ஸ் (47), புகாரை பெற்றுக்கொண்டார். அந்த புகார் மனு மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10 ஆயிரம் தர வேண்டும் என துரைசாமியிடம் ஸ்டேன்லி ஜோன்ஸ் கூறியுள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி, இதுகுறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி,  கடந்த 3.8.2010ல் எஸ்.ஐ., ஸ்டேன்லி ஜோன்சிடம் 10 ஆயிரம் பணத்தை துரைசாமி கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலீசார், ஸ்டேன்லி ஜோன்சை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

இவ்வழக்கு குறித்த விசாரணை திருவள்ளூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் அமுதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி டி.வி.மணி தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:  லஞ்சம் கேட்ட குற்றத்திற்காக ஸ்டேன்லி ஜோன்ஸ்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 25 ஆயிரம் அபராதமும், லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும், இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராதம் கட்டத் தவறினால், மேலும், 15 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து எஸ்.ஐ ஸ்டேன்லி ஜோன்சை போலீசார் பிடித்து புழல் சிறையில் அடைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: