ஆஸ்திரேலியாவில் 14,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்த 102 வயது மூதாட்டி

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் 102 வயது மூதாட்டி ஒருவர் விமானத்தில் இருந்து சுமார் 14,000 அடி உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து உலக சாதனை படைத்துள்ளார். ஸ்கை டைவ் (skydive) எனப்படும் இந்த சாகச விளையாட்டில் ஈடுபாடு கொண்ட ஐரீன் ஓஷியா (Irene O’Shea) என்ற அந்த மூதாட்டி, மிக மூத்த வயதில் ஸ்கை டைவிங் செய்த பெண்மணி என்ற சிறப்பை பெற்றுள்ளார். விமானத்தில் இருந்து சுமார் 220 கி.மீ. வேகத்தில் டைவிங் செய்து அசத்திய ஐரீன் தெற்கு ஆஸ்திரேலியாவின் மோட்டார் நியூரோன் நோய் சங்கத்திற்கு (Motor Neurone Disease Association of South Australia) நிதி திரட்டுவதற்காக இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 10 வருடத்திற்கு முன் மோட்டார் நியூரோன் எனும் நோய் தாக்கி தனது மகள் இறந்ததாகவும், மகளின் இறப்பு தம்மை வெகுவாக பாதித்ததாகவும் ஐரீன் தெரிவித்துள்ளார். எனவே இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையிலும் இந்த சாகச நிகழ்வினால் வரும் தொகையை அந்த சங்கத்திற்கு வழங்கிவருவதாக ஐரீன் தெரிவித்துள்ளார். ஐரின், தனது 100-வது பிறந்தநாளில் முதன் முறையாக ஸ்கை டைவிங் செய்துள்ளார். அதனைத்தொடர்ந்து, தற்போது மூன்றாவது முறையாக அவர் விண்ணில் இருந்து குதித்துள்ளார். இந்த சாகச நிகழ்வுகளின் மூலம் இதுவரை 12,000 டாலர்கள் நிதி திரட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: