பெண்களை பற்றிய அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய திருவள்ளூரை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது

சென்னை: துண்டிக்கப்பட்ட தலையுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவது, பெண்களை இழிவாக பேசி வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை துண்டிக்கப்பட்ட நபர் போட்டோ மார்பிங் செய்யப்பட்டது என்று திருவள்ளூர் எஸ்.பி. பொன்னி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் காலனியில், கடந்த 6ம் தேதி ஒரு இயக்கம் சார்பில் ஒரு தலைவரின் நினைவு நாள் நடந்தது. இதில், பங்கேற்ற ஒரு  இளைஞர், சில பெண்களையும் அவர்களின் சமுதாயத்தையும் இழிவுபடுத்தி கோஷமிட்டார். அதை சில வாலிபர்கள் வழிமொழியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் நிலையங்களில், பாமக சார்பில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், கொங்கு பேரவை, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தீரன் சின்னமலை பேரவை உட்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வி.சி.க, கட்சித் தலைவர் திருமாவளவனும், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். போலீசாரின் தீவிர விசாரணையில்,  அந்த வீடியோவை வெளியிட்ட நபர் திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரத்தை சேர்ந்த அன்பழகன் (20) என்பதும், வழிமொழிந்தவர்கள் சாலமன் (34), அன்புராஜ் (31), வினோத் (26) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான தனிப்படை போலீசார், சாலமன், அன்புராஜ், வினோத் ஆகிய மூவரையும் நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய நபரான அன்பழகனை தொடர்ந்து தேடி வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட  சாலமன், சேலத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  மீது செருப்பு வீச முயன்று கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அன்பழகன் பதிவேற்றம் செய்து வெளியிட்ட வீடியோவுடன், வேறொரு நபரின் துண்டிக்கப்பட்ட தலையை மார்பிங் மூலம் இணைத்து, அன்பழகன் தலை துண்டிக்கப்பட்டு உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மார்பிங் செய்யப்பட்ட போட்டோ

திருவள்ளூர் எஸ்.பி., பொன்னி நிருபர்களிடம் கூறுகையில், ‘மேற்படி துண்டிக்கப்பட்ட தலையானது கடந்த 18.11.2018 அன்று திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து உட்கோட்டம், சீவலப்பேரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கலையரங்கம் உள்ளே கொலை செய்யப்பட்ட ராகவல்லிபுரம் பால்துரை (18) என்பவருடையதாகும். பல்வேறு சமூகத்தினர் இடையே விரோத மனப்பான்மையை தூண்டி சாதி மோதலை ஏற்படுத்தி, சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்துடன், மார்பிங் செய்து வீடியோவை சமூக விரோதிகள் சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர்.

பொதுமக்கள் இதுபோன்ற வதந்தியை நம்பாமல், சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். மேற்படி வீடியோவை வெளியிட்ட நபரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: