2018-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் வழங்கும் விழா: ஸ்வீடன் மற்றும் நார்வேயில் கோலாகலம்

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் மற்றும் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று நோபல் பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்வீடன் நாட்டின் விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. மனித குலத்தின் முன்னேற்றத்திற்காக இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.

அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் விழா நார்வே தலைநகர் ஆஸ்லோவிலும், மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் வழங்கும் விழா ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது. ஆல்ஃபிரட் நோபலின் நினைவு நாளான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நேற்று நடந்த விழாவில் அமைதிக்கான நோபல் பரிசு, ஈராக் நாட்டின் நாடியா முராத் என்பவருக்கும், காங்கோவை சேர்ந்த மருத்துவர் டெனிஸ் முக்வேகே என்பவருக்கும் வழங்கப்பட்டது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற விழாவில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோருக்கும், வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் பி.ஸ்மித், கிரகோரி வின்டர் ஆகியோருக்கும், இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட், ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸைச் சேர்ந்த ஜெரால்ட் மொரூ ஆகியோருக்கும், மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் பி. அலிசன், ஜப்பானைச் சேர்ந்த டசுகு ஹோஞ்சோ ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டபடி பரிசுகள் வழங்கப்பட்டன. அந்தந்த துறையின் நோபல் பரிசு தொகை தலா ரூ.7.5 கோடியை விஞ்ஞானிகள் பகிர்ந்து கொண்டனர். இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: