ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா எதிரொலி : இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் சரிவு

மும்பை:  ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை உர்ஜித் படேல் நேற்று திடீரென ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 510 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டி சுமார் 200 புள்ளிகள் வரை சரிந்தது. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய உள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக தகவல்கள் வெளிவந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சமாளிப்பது, பொதுத்துறை வங்கிகளை முறைப்படுத்துவது, வட்டி நிர்ணயம் உள்ளிட்ட 6 பிரச்னைகளில் மத்திய அரசு ரிசர்வ் வங்கி இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7வது பிரிவை பயன்படுத்தி  பொது மக்கள் நலன் அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு அறிவுறுத்த வகை செய்கிறது. சிறப்புரிமையாக இதை மத்திய அரசு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. புகைந்து கொண்டிருந்த இந்த மோதல் விவகாரத்தை வெட்ட வெளிச்சமாக்கியவர் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யாதான். ‘‘ரிசர்வ் வங்கியின் முடிவுகள், செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடுகிறது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை மத்திய அரசு மதிப்பதில்லை’’ என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ரிசர்வ் வங்கியின் கூடுதல் கையிருப்பு தொகையான ரூ.3.6 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் ரிசர்வ் வங்கி, மத்தியஅரசு  இடையே மோதல் ஏற்பட்ட விஷயங்களில் சுமுகத் தீர்வு காண குழுக்கள் ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் பிரச்னைகள் முடிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், நேற்று மாலை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், ‘‘சொந்த காரணங்களுக்காக ரிசர்வ் வங்கி கவர்னர்  பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்தேன், இந்த ராஜினாமா  உடனடியாக அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் கவுரவமிக்க கவர்னர் பதவியை  கடந்த ஆண்டுகளில் வகித்ததை மிகவும் பெருமையாகக் கருதுகிறேன்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவரும் காரணத்தால் வாரத்தின் முதல் நாளான நேற்றே பங்குச்சந்தைகளில் அதன் தாக்கம் கடுமையாக எதிரொலித்தது. நேற்றும் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன்தான் காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் நேற்று 50 காசு சரிந்து 71.32 ஆக இருந்தது. ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியதால் இன்றும் பங்குச்சந்தை வீழ்ச்சி தொடரும் என நிபுணர்கள் எச்சரித்திருந்தனர். நிபுணர்கள் எச்சரித்ததை போலவே இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: