கடைசி நாளில் ஆஸ்திரேலிய அணி கடும் போராட்டம்: இந்தியா மரண மாஸ் வெற்றி

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றியை வசப்படுத்தி 1-0 என முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, முதலில் விளையாடிய டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்து இரு அணிகளும் 4 போட்டிகள் கொண்ட கடினமான டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன் குவித்தது. புஜாரா 123 ரன் விளாசினார்.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன் எடுத்தார். இதையடுத்து, 15 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 307 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. புஜாரா 71 ரன், ரகானே 70, ராகுல் 44. கோஹ்லி 34, பன்ட் 28, விஜய் 18 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் லயன் அபாரமாகப் பந்துவீசி 6 விக்கெட் கைப்பற்றினார்.  இதைத் தொடர்ந்து, 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்திருந்தது. ஷான் மார்ஷ் 31 ரன், டிராவிஸ் ஹெட் 11 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹெட் 14 ரன் எடுத்து இஷாந்த் வேகத்தில் ரகானே வசம் பிடிபட்டார். அடுத்து ஷான் மார்ஷுடன் கேப்டன் டிம் பெய்ன் இணைந்தார்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தனர். மிரட்டத் தொடங்கிய இந்த ஜோடியை பூம்ரா தனது துல்லியமான வேகப்பந்துவீச்சால் அடக்கினார். மார்ஷ் 60 ரன் (166 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பூம்ரா வேகத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் வசம் பிடிபட, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். டிம் பெய்ன் 41 ரன் (73 பந்து, 4 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 187 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து தடுமாறியதால், இந்தியா எளிதாக வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸி. அணியின் கடைசி வரிசை வீரர்கள் உறுதியுடன் போராட ஆட்டம் விறுவிறுப்பானது. இந்திய வீரர்களின் பொறுமையை வெகுவாக சோதித்த ஸ்டார்க், கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கம்மின்ஸ் 121 பந்துகளை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆஸி. அணி 259 ரன்னுக்கு 9வது விக்கெட்டை இழக்க, இந்திய வெற்றி அனேகமாக உறுதியாகிவிட்டது என்றே தோன்றியது. எனினும், கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயன் - ஹேசல்வுட் ஜோடி சளைக்காமல் போராடி ரன் சேர்த்ததால் ஓவ்வொரு பந்தும் மரணப் போராட்டமாகவே மாறியது. ஆஸி. அணி இலக்கை நெருங்க... நெருங்க... களத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. இருவரும் 32 ரன் சேர்த்து இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்தனர். ஹேசல்வுட் 13 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் கே.எல்.ராகுலிடம் பிடிபட, ஆஸ்திரேலிய போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்த அணி 119.5 ஓவரில் 291 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. லயன் 38 ரன்னுடன் (47 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய பந்துவீச்சில் அஷ்வின், ஷமி, பூம்ரா தலா 3 விக்கெட், இஷாந்த் 1 விக்கெட் வீழ்த்தினர். 31 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்திய இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்சில் 123 ரன், 2வது இன்னிங்சில் 71 ரன் விளாசி வெற்றிக்கு வித்திட்ட புஜாரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்திய அணி ஆஸி. மண்ணில் விளையாடும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தியா ஆஸி. மண்ணில் மீண்டும் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது.

ஆஸி. மண்ணில் முதல் முறை...

* இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடிய டெஸ்ட் தொடர்களில், முதல் டெஸ்டில் வென்று 1-0 என முன்னிலை பெறுவது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் விளையாடிய 11 தொடர்களின் முதல் டெஸ்டில் 2 டிரா, 9 தோல்வி கண்டிருந்தது.

* ஆஸ்திரேலியாவில் 6வது முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டுள்ளது. கடந்த 35 ஆண்டுகளில் இது 3வது முறையாகும். கடைசியாக பெர்த் மைதானத்தில் 2008 ஜனவரியிலும், அடிலெய்டில் 2003 டிசம்பரிலும் வென்றிருந்தது.

* 2000வது ஆண்டில் இருந்து அடிலெய்டு மைதானத்தில் 2 முறை வென்ற ஒரே வெளிநாட்டு அணி என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

* கடந்த 100 ஆண்டுகளில் அடிலெய்டு மைதானத்தில் 200+ ரன் இலக்கை எந்த ஒரு ஆஸ்திரேலிய அணியும் வெற்றிகரமாக துரத்தியது இல்லை என்ற வரலாறு தொடர்ந்து நீடிக்கிறது. 15 முயற்சிகளில் அந்த அணி 8 டிரா, 7 தோல்வி கண்டுள்ளது.

* இந்தியா குறைந்த ரன் வித்தியாசத்தில் வென்ற டெஸ்ட் போட்டிகளில் இது 3வது இடத்தை பிடித்துள்ளது (31 ரன்). இதற்கு முன்பாக 2004-05ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸி.க்கு எதிராக 13 ரன் வித்தியாசத்திலும், 1972-73ல் ஈடன் கார்டனில் இங்கிலாந்துக்கு எதிராக 28 ரன் வித்தியாசத்திலும் வென்றுள்ளது.

* தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா 1 டெஸ்ட் போட்டியிலாவது வென்ற முதல் ஆசிய அணி கேப்டன் என்ற சாதனையை விராத் கோஹ்லி வசப்படுத்தி உள்ளார். இந்த 3 வெற்றியுமே 2018 சீசனில் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது (வாண்டரர்ஸ், டிரென்ட் பிரிட்ஜ், அடிலெய்டு).

* ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் ஜாக் ரஸ்ஸல், டி வில்லியர்சின் உலக சாதனையை (11 கேட்ச்) இந்தியாவின் ரிஷப் பன்ட் சமன் செய்துள்ளார்.

* அடிலெய்டு டெஸ்டில் மொத்தம் 35 கேட்ச் பிடிக்கப்பட்டன. இதுவும் உலக சாதனையாக அமைந்தது. முன்னதாக கேப் டவுனில் இந்த ஆண்டு ஆஸி. - தென் ஆப்ரிக்கா மோதிய டெஸ்டில் 34 கேட்ச் பிடிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: