நிலஆர்ஜித சட்டத்தில் திருத்தம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு நோட்டீஸ் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: நிலஆர்ஜித சட்டத்தில், தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ல் பா.ஜ அரசு பதவி ஏற்றதும், நிலஆர்ஜித சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதில் குஜராத், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, ஜார்கண்ட் போன்ற மாநிலங்கள் சில பிரிவுகளுக்கு விலக்கு அளித்தன. இதை எதிர்த்து சமூக சேவகி மேதா பட்கர் உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனுவில் கூறியிருந்ததாவது: மத்திய அரசு கொண்டு வந்த நிலஆர்ஜித சட்ட திருத்தத்தில் ஒப்புதல் அளிக்கும் பிரிவு, சமூக பாதிப்பு மதிப்பீடு, நிலம்  கையகப்படுத்தும்போது உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்பது  போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கும் வகையில் மாநில அரசுகள் திருத்தங்கள் செய்துள்ளன. தொழிற்சாலை, நெடுஞ்சாலை அமைக்கும் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்து  கேட்பு, ஒப்புதல் பெறுதல், நிபுணர் அறிக்கை கேட்பு, சமூக பாதிப்பு  மதிப்பீடு போன்றவற்றுக்கெல்லாம் மாநிலங்கள் விலக்களித்துள்ளன.  இது ஊழலை அதிகரிக்கும்.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்  மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்த 70 சதவீத நில  உரிமையாளர்களின் அனுமதி தேவை என மத்திய சட்டத்தில் உள்ளது. அந்த பிரிவையும்  மாநிலங்கள் நீக்கியுள்ளன. நியாயமான இழப்பீடு, நிலகம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கு இந்த திருத்தங்கள் முரணாக இருப்பதால், இவற்றை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண், ‘‘நிலம் கையகப்படுத்தும்போது பொதுமக்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்பது நிலஆர்ஜித சட்டத்தின் சாராம்சம். ஆனால் முக்கியமான இந்த பிரிவுக்கு மாநிலங்கள் விலக்களித்துள்ளன’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘சட்ட விதிமுறைகள் படி மாநில அரசுகள் திருத்தம் செய்ய முடியும். இதை மாநில அரசுகள் விரும்பினால், ‘நீங்கள் செய்ய முடியாது என நாங்கள் கூற முடியாது’ என்றனர்.  இதற்கு பதில் அளித்த பிரசாந்த் பூஷன், ‘‘மத்திய அரசு 2014ம் ஆண்டு ஆட்சி வந்த பிறகு, நிலஆர்ஜித சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.

ஆனால் அது நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதையடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அதுவும் கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் காலாவதியானது. நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தத்தை நிறைவேற்ற முடியாததால், அந்த திருத்தத்தை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி மாநிலங்கள் இந்த திருத்தங்களை செய்துள்ளனர். அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு,  வாழ்க்கை பாதுகாப்பு, தனிநபர் சுதந்திரம், கவுரவத்துடன் வாழும் உரிமை, அதிகளவிலான மக்கள் பயன் இல்லையென்றால், இடம் பெயராமல் இருக்கும் உரிமை ஆகியவற்றை விவரிக்கிறது’’ என்றார். இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள், சட்ட திருத்தம்  குறித்து குஜராத், ஆந்திரா, தெலங்கானா, தமிழகம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பதில் அளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: