நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசு உயர்வு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலையில் ஒரே நாளில் 20 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் என்இசிசி, பண்ணையாளர்கள் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை நிர்ணயத்தில் பல்வேறு குளறுபடி இருப்பதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம், துணைத்தலைவர் சிங்கராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், பண்ணையாளர்கள் முட்டை விலையில் 15 காசுகள் உயர்த்தவேண்டும் என விலை நிர்ணய குழுவினரை வற்புறுத்தினர். இதையடுத்து என்இசிசி நாமக்கல் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணியம், வாட்ஸ் அப் குரூப் மூலம் பெறப்பட்ட முட்டை விலை நிர்ணய குழு உறுப்பினர்களின் ஆலோசனையை படித்தார்.

மொத்தம் உள்ள 27 உறுப்பினர்களில் 13 பேர் 20 காசும், 8 பேர் 15 காசுகளும் உயர்த்த வேண்டும் என தெரிவித்தனர். பெரும்பாலான உறுப்பினர்களின் ஆலோசனையை ஏற்று,  ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை 20 காசு உயர்த்தி 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததை விட 5 காசுகள் அதிகமாக உயர்த்தப்பட்டதால், பண்ணையாளர்கள் அமைதியாகி சென்றனர். இது குறித்து என்இசிசி நிர்வாகிகள் கூறுகையில், ‘ஐதராபாத் மண்டலத்தில், முட்டை விலை 410 காசாக உள்ளது. அந்த மண்டலத்தின் விலையை அனுசரித்துதான் நாமக்கல் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும். நாமக்கல்லில் 30 காசு மைனஸ் விலை உள்ளதால், முட்டையின் விலை 20 காசு வரை உயர்த்தப்பட்டுள்ளது,’ என்றனர்.

மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் (காசுகளில்) ஐதராபாத்- 410, விஜயவாடா- 411, பர்வாலா- 427, மும்பை- 457, மைசூர்- 437, பெங்களூரு- 420, கொல்கத்தா- 463, டில்லி- 451 காசுகள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: