151 ரன் வித்தியாசத்தில் ரஞ்சியில் தமிழகம் அபார வெற்றி

சென்னை: கேரள அணியுடன் நடந்த ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் தமிழகம் 268 ரன், கேரளா 152 ரன் எடுத்தன. 116 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தமிழகம், 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கேரளா 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 27 ரன் எடுத்திருந்தது. கை வசம் 9 விக்கெட் இருக்க வெற்றிக்கு இன்னும் 342 ரன் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொண்ட கேரளா, தமிழக வீரர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் துடிப்பான பீல்டிங்கை சமாளிக்க முடியாமல் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (89 ஓவர்).

அருண் 33, ஜோசப் 55, சஞ்சு சாம்சன் 91 ரன் (192 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாச, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (5 பேர் டக் அவுட்). தமிழக பந்துவீச்சில் நடராஜன் 5, சாய் கிஷோர், அபராஜித் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். 151 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற தமிழகம் 6 புள்ளிகளை தட்டிச் சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: