அவரை நினைத்தாலே தன்னம்பிக்கை வரும் !

தன்னம்பிக்கைக்கு உதாரணமாக எத்தனையோ பிரபலங்களையும், நட்சத்திரங்களையும் சொல்கிறோம். அவர்கள் எல்லோரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட துருவ நட்சத்திரம் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ். 21 வயதில் Amyotrophic lateral sclerosis (ALS) எனும் நோயால் பாதிக்கப்பட்டவர் ஸ்டீபன். ‘இவர் இன்னும் 2 வருடங்கள் உயிரோடு இருந்தாலே பெரிய விஷயம்’ என்று மருத்துவர்கள் அவருக்கு கெடு வைத்தார்கள்.

ஆனால், மருத்துவர்களின் முன் முடிவுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தன்னுடைய 76 வயது வரை அவர் உயிர் வாழ்ந்தார். சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே அறிவியல் உலகை ஆண்டார். சக்கர நாற்காலியில் வாழ்க்கை உட்கார வைத்த சவாலையும் தாண்டி, ஒரு கட்டத்தில் தன்னுடைய பேச்சுத்திறனை இழந்தார் ஸ்டீபன். கை, கால் அசைவுகளும் முற்றிலும் நின்றுபோனது.

ஆனாலும், மனம் தளராமல் மற்றவர்களுடன் தொடர்புகொள்ள தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தினார். தினசரி வாழ்க்கைக்குப் பயன்படும் 3000 வார்த்தைகளைப் பதிவு செய்து வைத்துக் கொண்டார். ஒரு பட்டனை அழுத்தினால், ‘காஃபி வேண்டும்... உணவு வேண்டும்’ என்பதுபோன்ற சப்தங்கள் கம்ப்யூட்டரிலிருந்து வெளிவரும். இதேபோல், ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு முறையை பயன்படுத்தினார்.

கைகளை அசைக்கும் திறனையும் ஒரு கட்டத்தில் அவர் இழந்தபோது, அதன்பின் கன்னத்தின் தசைகளை கணினியுடன் இணைத்து அதன்மூலம் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசி வந்தார். இரண்டு திருமண வாழ்க்கையும் தோல்வி. தினசரி வாழ்க்கையிலேயே இத்தனை போராட்டங்களோடு வாழ்ந்தும், அவற்றை எல்லாம் கடந்து இயற்பியல் உலகிலும், அறிவியல் உலகிலும் தனக்கென மகத்தான இடத்தை அடைந்த ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், நம் எல்லோருக்கும் தன்னுடைய வாழ்க்கையினையே பாடமாகக் கற்றுக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்.

- ஜி.ஸ்ரீவித்யா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: