வேளாண்மையில் கார்ப்பரேட் படையெடுப்பு!

இளங்கோ கிருஷ்ணன்

உலகமயமாக்கலால் கட்டற்றுப் பெருகும் மூலதனம் எப்படி உணவுத் துறைக்குள் நுழைந்து உடலுக்குத் தேவையற்ற மசாலா பொருட்களை சந்தைப்படுத்தி நம் உடலைக் கெடுப்பதோடு அதற்கான விளைநிலங்களை இந்தியாவில் உருவாக்கி விவசாயத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது என்று பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ஆந்திரா பிரதேசம், கர்நாடகா என விவசாயம் தழைத்தோங்கும் மாநிலங்களைவிட முன்னணியில் இருப்பது குஜராத்தான். கார்பரேட் விவசாயத்தின் முதல் காலடியும் பரிசோதனை முயற்சியும் குஜராத்தில்தான் தொடங்கியது என்றால் அது மிகையில்லை. இந்த பத்தாண்டின் தொடக்கத்தில் அதாவது 2011ல் இன்றைய பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தின் வளர்ச்சியின் முகம் என்றும் அவரே இந்தியாவின் எதிர்காலம் என்றும் வட இந்திய ஊடகங்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டுக்கொண்டிருந்தார். அதற்காக அவர்கள் முன்வைத்த வாதங்களில் ஒன்று குஜராத்தின் விவசாய வளர்ச்சி.

இந்தியாவின் ஆண்டு சராசரி விவசாய வளர்ச்சி 2.9 சதவீதம் மட்டுமே. ஆனால், குஜராத்தின் வளர்ச்சியோ ஒன்பது சதவீதம் என்றார்கள்.

ரோமில் உள்ள உணவு விவசாயக் கழகத்தின் துணை நிறுவனமான உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையம் எனப்படும் IFPRI (International food policy research institutue) குஜராத்தைப் பார்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சொன்னது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திலிருந்துகூட அமைச்சர்களையும் நிபுணர் குழுக்களையும் குஜராத் அனுப்பி ஆராய்ந்து

வரச்சொன்னார்.

சரி அப்படி என்னதான் நடந்தது குஜாத்தில்… கடந்த 2005ல் குஜராத் அரசு விவசாயம் தொடர்பாக இரு சட்டங்களைக் கொண்டுவந்தது. அதில் ஒன்று ஒப்பந்த விவசாயத்தை குஜராத் முழுதும் பரவலாக அமுலாக்குவது. இத்த சட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களும் மாநில அரசும் கூட்டாகச் சேர்ந்து விவசாயிகளுக்குத் தேவையான உற்பத்திப் பொருட்களை வழங்குவார்கள். விவசாயிகள் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு உற்பத்தி செய்து தர வேண்டும். இதற்கான ஒப்பந்தம் ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை விவசாயிகளிடம் செய்துகொள்ளப்படும். இந்த சட்டத்தை அமுலாக்கவே விவசாய உற்பத்தி விற்பனைக் குழு தீவிரமாகச் செயல்பட்டது.

இரண்டாவது சட்டம் கார்ப்பரேட் விவசாயத்துக்கும் பயோ ஃப்யூயல் எனப்படும் காட்டமணக்கு பயிரிடும் திட்டத்துக்கும் தரிசு நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் சட்டம். இதன்படி, குஜராத்தில் அரசுக்கு சொந்தமான நாற்பத்திரண்டு லட்சம் ஹெக்டேர் நிலங்கள். தனியார் நிறுவனங்களுக்கு இருபது ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டன.  இந்த இரு சட்டங்கள் மூலமாக குஜராத் அரசு கார்ப்பரேட் விவசாயத்துக்கு விளைநிலங்களைத் திறந்துவிட்டது. விதை, உரம், பூச்சி மருந்துகள், சேமிப்புக் கிடங்குகள், கொள்முதல், விநியோகம்  என அனைத்தையும் கட்டுப்படுத்தி, பெருந்தொழில் குழுமங்கள் விவசாயத்தை ஆதிக்கம் செய்ய வழிவகுத்த சட்டங்கள் இவை. இதனால் நிஜமாகவே விவசாயிகளுக்கு எந்த லாபங்களும் இல்லை.

இன்று நேற்று அல்ல சுமார் இருபது ஆண்டுகளாகவே அந்நிய மற்றும் உள்நாட்டு பகாசுர கார்பரேட்டுகளை உணவு மற்றும் உணவைப் பதப்படுத்துதல் துறையில் முதலீடு செய்ய குஜராத் அரசு பட்டுக் கம்பளம் விரித்து வரவேற்று வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டில் மட்டும் இது தொடர்பாக சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.. இதன் மூலமாக, சுமார் 32,450 கோடி ரூபாய் அளவுக்கு குஜராத்தில் தனியார் முதலீடுகள் குவிந்தன.  குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் உற்பத்திநுகர்வு சங்கிலியை ஒருங்கிணைக்க மூன்றாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்துள்ளது.

இரண்டாயிரமாவது ஆண்டில் அக்ரோசெல் நிறுவனம் பருத்தி மற்றும் எள் ஒப்பந்த விவசாயத்தை குஜராத்தில் தொடங்கியது. அப்போது ஐநூறு விவசாயிகளைக் கொண்டு இரண்டாயிரத்து ஐநூறு ஹெக்டேரில் ஒப்பந்த விவசாயம் செயல்படுத்தப்பட்டது. இது 2008ல் 45,000 விவசாயிகள், 2,18,000 ஹெக்டேர் பரப்பளவு என அதிகரித்தது. தேசாய் , பார்தி முதலான நிறுவனங்கள் சுமார் ஏழாயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒப்பந்த விவசாயத்தின் மூலம் மாம்பழம் மற்றும் வாழைப்பழங்களை உற்பத்தி செய்து ஐரோப்பியச் சந்தைக்கு அனுப்பிவருகின்றன.  மெக்டொனால்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான ஏக்கரில் உருளைக்கிழங்கு ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டுள்ளது. ஏ.சி.ஐ.எல். என்ற நிறுவனம் ஒப்பந்த விவசாய அடிப்படையில் பருத்தியை உற்பத்தி செய்து வருகிறது. சொட்டு நீர்ப்பாசன நிறுவனமான ஜெயின், ஒப்பந்த விவசாயத்தின் மூலமாக வெங்காய உற்பத்தியை மேற்கொள்கிறது. இவ்வாறு குஜராத்தில் பல லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் ஒப்பந்த விவசாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இத்தகைய புதிய சட்டங்கள், திட்டங்களால்தான் குஜராத்தின் விவசாயம் புதிய பரிமாணத்தை எட்டியது. வளர்ச்சி எங்கே? மலர்ச்சி எதிலே? என்பதற்கு சில அளவுகோல்கள் இருக்கின்றன. கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல மக்களின் அடிப்படை வாழ்வை சிதைத்து கிடைக்கும் முன்னேற்றம் நிஜத்தில் முன்னேற்றமே அல்ல. அது ஒருதரப்பினருக்கு வேண்டுமானால் பொருளாதார லாபமாய் இருக்கலாம். பெரும்பான்மை மக்களுக்கு அது ஒரு தீராத தீமைதான்.குஜராத் மாநிலம் காலங்காலமாக விவசாயத்தில் ஈடுபட்டு வரும் மாநிலங்களில் ஒன்று. இங்கு, கடந்த கால விவசாயத் திட்டங்களால் சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் தேசம் முழுதும் இருந்த சீரான வளர்ச்சிப் போக்கின்படி சிறு நில உடமையாளர்கள் பெரிய நிலவுடமையாளர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி சாகுபடி செய்யும் பழக்கம் இருந்துவந்தது. அதுபோலவே, பெரிய நிலவுடமையாளர்கள் சிறுவுடமையாளர்களிடம் வாங்குவதும் அங்கொன்றும் இங்கொன்றும் வழக்கமே. கிட்டதட்ட சென்ற நூற்றாண்டின் கடைசி வரைக்கும் சூழல் இப்படித்தான் இருந்தது.

ஆனால் இரண்டாயிரத்துக்குப் பிறகு இதில் அரசின் விவசாயம் சார்ந்த கொள்கைகளால் மாற்றங்கள் உருவாகின. அதாவது, பெருவுடமையாளர்கள் சிறு விவசாயிகளிடம் நிலத்தை அபகரித்து விவசாயம் செய்வது அதிகரித்தது. மறுபுறம் நிலத்தை இழந்த விவசாயிகள் அதே நிலத்தில் விவசாயக் கூலிகளாக மாறுவதும், கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்வதும் அதிகரித்தொடங்கின. இந்த நவீன பண்ணையார்களால் நிலம் கைமாறுவது குஜராத்தில் மிகவும் வேகமாக அதிகரித்திருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.மேலும், இந்தப் புதிய பண்ணைகள் நவீன விவசாயக் கருவிகள், நவீன தொழில்நுட்பம், உரம், பூச்சி மருந்து, தொடர்ச்சியான ஒற்றைப் பயிர் சாகுபடி எனச் செயல்படுவதால் மண்ணின் வளமும் பாழாகிறது. மறுபுறம் விவசாயக் கூலிகளின் தேவையும் குறைந்த இம்மண்ணின் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வயிற்றுக்கும் உடல் நலத்துக்கும் தீங்கான ஜங்க் ஃபுட்ஸ் போன்ற கார்ப்பரேட் உணவுப் பொருட்களின் மூலப் பொருள் உற்பத்திக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஒருபுறம் என்றால் மறுபுறம் ஹை வேல்யூ அக்ரிகல்ச்சர் என்று ஒரு முறையைப் பயன்

படுத்துகிறார்கள். இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் மேட்டுக்குடிகள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் ஆகியோருக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உற்பத்திக்காக விவசாய நிலங்களைப் பயன்படுத்துவதுதான் அது. குஜராத் அரசு இதையும் இரு கரம்கூப்பி வரவேற்கிறது.

தொன்னூறுகளில் நான்கு லட்சம் ஹெக்டேராக இருந்த காய்கறி, பழ உற்பத்திக்கான விவசாயம் அடுத்த பதினைந்து ஆண்டுகளில் ஆறு லட்சம் ஹெக்டேராக உயர்ந்தது. தற்போது இது பத்து லட்சம் ஹெக்டேருக்கு மேல் உயர்ந்திருக்கிறது. இந்த நிலங்களில் எல்லாம் முன்பு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உற்பத்தி நிகழ்ந்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தானிய உற்பத்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஆடம்பர உணவுப் பொருட்களைப்பெருக்குவதில் என்ன மாதிரியான உணவுத் தன்னிறைவு அடைகிறோம் என்ற கேள்வி முக்கியமானது. நிஜமாகவே கோடிக்கணக்கானவர்கள் உணவின்றி தவிக்கும் நாட்டில் இதுபோன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய இருக்கும் நன்செய் நிலங்களை சீரழிக்க வேண்டுமா என்பதுதான் கேள்வி.குஜராத்தின் ஒட்டுமொத்த பருத்தி விவசாயத்தில் 54 சதம் பி.டி. பருத்தி விதை (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி) கொண்டு பயிரிடப்படுகிறது. 30க்கும் மேற்பட்ட தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் பி.டி. பருத்தி விதையை விற்பனை செய்கின்றனர். இந்நிறுவனங்கள் அனைத்தும் பி.டி. பருத்தி விதைக்குக் காப்புரிமை கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களாகும். மான்சான்டோதான் விலையைத் தீர்மானிக்கிறது. இதனால் பருத்தி விவசாயிகளுக்குச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு லாபமில்லை; காய் புழு நோயையோ கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

குஜராத் மட்டும் அல்ல ஒவ்வொரு மாநிலத்திலுமே இன்று இதுதான் விவசாயத்தின் நிலைமை. இதைப் பற்றி இன்னும் விரிவாகவே தொடர்ந்து பார்ப்போம். அதற்கு முன்பு, இந்தப் பகுதிகான பாரம்பரிய நெல் ரகமான சிங்கினிக் கார் பற்றி பார்ப்போம்.சிங்கினிக்கார் சிறு செலவில் பயிராகும் பாரம்பரிய நெல் ரகமாகும்.  மழை, நீர் தேக்கத்தில்கூட இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் வல்லமை கொண்டது. இயற்கையாகவே நோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட இந்த நெல் ரகம், நடுத்தர வகையாக, சிவப்பு நிற நெல்லையும், சிவப்பு நிற அரிசியையும் உடையது. களைகள் நிறைந்துள்ள நிலத்திலும் சாகுபடி செய்ய ஏற்றதான இந்நெல்லுக்கு  இடுபொருளே தேவை இல்லை. இயற்கையாகவே வளரும்.

இதன் சாகுபடியின்போது அறுவடைக்குப் பின் வைக்கோலின் பெரும்பகுதி நிலத்தில் சிதைந்து மக்குவதால், மண்ணின் சத்தும் கூடுகிறது. இந்தச் சத்தையே உணவாக எடுத்துக்கொண்டு வளரும் தன்மையை இயற்கையாகவே இந்த ரகத்துக்கு உண்டு. நிலத்தில் மக்கும் பொருட்களால் மண்ணில் உண்டாகும் நுண்ணுயிர்களைச் சத்துகளாக எடுத்துக்கொண்டு, இடுபொருள் செலவு தேவையின்றியே வளரும் அற்புத ரகம். சிங்கினிக்கார் நெல்லின் அரிசி உணவுக்கும், பலகார வகைகளுக்கும் ஏற்றது. அவல், மற்றும் பொரிக்கு ஏற்ற ரகமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகுந்தது. நோயாளிகள், உடல் பலவீனமானவர்கள், வளரும் குழந்தைகள் ஆகியோர் இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் வலுவாகும். இதன் அரிசிக் கஞ்சி உள்ளுறுப்புகளை வலுவாக்குவது. சிவப்பு அரிசியின் அயானிக் அளவிலான சத்துகள் இதில் நிறைந்திருப்பதால் நல்ல எனர்ஜி கிடைக்கும்.

(செழிக்கும்)

நெல்லின் செல்வர் ஜெயராமன்!

இயற்கை விவசாயம் சார்ந்த விஷயங்களில் ஆர்வமுடையவர்களுக்கு நெல் ஜெயராமனைத் தெரியாமல் இருக்காது. ஆயிரமாயிரம் ஆண்டு காலமாய் நம் முன்னோர் பயன்படுத்தி வந்த பாரம்பரிய நெல் ரகங்கள்  அனைத்தும் நவீன வேளாண்மை மற்றும் ஹைப்ரிட் நெல் ரகங்களின் வருகையால் இருந்த சுவடே தெரியாமல் போயின. தமிழகத்தில் மட்டும் சுமார் பதினைந்தாயிரம் வகையான நெல் ரகங்கள்இருந்தன என்கிறார்கள். இன்று இவற்றில் சில நூற்றுக் கணக்கான ரகங்களை மட்டுமே மீட்டு எடுத்திருக்கிறோம்.கடுமையான உழைப்பையும் நெடிய பயணங்களையும் சோர்வற்ற பொறுமையையும் தீவிரமான தேடுதலையும் கோரும் இந்த வேலையை சுமார் இருபது ஆண்டுகளாக கைமாறு கருதாது செய்துவருபவர்தான் நெல் ஜெயராமன். இவரது அரிய முயற்சியால் இதுவரை நூற்றி எழுபதுக்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தின் இயற்கை வேளாண் நிபுணரான நம்மாழ்வாரின் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நெல் ஜெயராமன். இந்த நெல் தேடலுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துக்கொண்டுள்ளார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜெயராமன். ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். திருத்துறைப்பூண்டியில் தொழிலாளியாக வேலை செய்தார். நஞ்சில்லா உணவு என்ற கோட்பாட்டை முன்வைத்து கடந்த 2003ம் ஆண்டு நம்மாழ்வார் ஒரு நடைபயணம் நிகழ்த்தினார். பூம்புகார் முதல் கல்லணை வரை ஒரு மாத காலம் நிகழ்ந்த இந்த நடைபயணத்தில் நம்மாழ்

வாருடன் இணைந்தார் ஜெயராமன்.

அந்தப் பயணத்தின்போது காட்டுயானம் உட்பட, அதுவரை கண்டெடுக்கப்படாத அரிதான ஏழு பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை சில விவசாயிகள் நம்மாழ்வாரிடம் வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட நம்மாழ்வார் அதை ஜெயராமனிடம் ஒப்படைத்தார். அவற்றை மறுஉற்பத்தி செய்து விவசாயிகளிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதுதான் ஜெயராமன் மனதில் விழுந்த முதல் விதை. அப்போது தொடங்கிய பயணம் இன்று வரை இடையறாது தொடர்ந்துகொண்டிருக்கிறது. அன்று மனதில் விழுந்த விதைதான் இன்று திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமத்தில் பாரம்பரிய நெல் மையமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் நரசிம்மன் என்பவர் வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில் நெல் ஜெயராமனால் உருவாக்கப்பட்ட இந்த பாரம்பரிய நெல் மையம் இயற்கை வேளாண் ஆர்வலர்களின் புகலிடமாக உள்ளது.

புதியவர்களுக்கு இயற்கை வேளாண்மை தொடர்பான சந்தேகங்களை தெளிப்படுத்துவதோடு பாரம்பரிய நெல் விதைகளையும் வழங்கிவருகிறார் நெல் ஜெயராமன். ஆதிரெங்கத்தில் ஆண்டுதோறும் மே கடைசி வாரத்தில் பாரம்பரிய நெல் திருவிழாவை ஜெயராமன் கடந்த 2006 முதல் நடத்துகிறார். தமிழகம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் இதில் பங்கேற்கின்றனர். இதில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் இரண்டு கிலோ பாரம்பரிய நெல் விதை இலவசமாக வழங்கப்படுகிறது.

அதை அவர்கள் தங்கள் வயல்களில் விளைவித்து, அவரவர் பகுதிகளில் அவற்றை பரவச் செய்ய வேண்டும். மீண்டும் அடுத்த ஆண்டு நெல் திருவிழாவுக்கு வரும்போது நான்கு கிலோ விதையைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

இந்த நிபந்தனையுடன் நெல் திருவிழாவில் பங்கேற்கும் விவசாயிகளால் 169 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், தற்போது தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் பரவலாகப் பயிர் செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் இந்த நெல் திருவிழாவில் சுமார் ஐந்தாயிரம் பேர் வரை பங்கேற்கின்றனர். விவசாயிகள் மட்டும் இன்றி ஐ.டி போன்ற நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள்கூட ஆர்வமுடன் இவ்விதைகளை வாங்கிச் செல்கின்றனர்.ஜெயராமனின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு - பாரம்பரிய அறிவுக்கான விருதையும், SRISTI அமைப்பின் இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான SRISTI சம்மான் விருதையும் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கவுரவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: