வெளிமாநில ஆட்டிறைச்சி கொண்டு வர லஞ்சம் கொடுக்க வேண்டும்

* ராயபுரம் அலி,  தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள்

மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்க பொதுச்செயலாளர்

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஆட்டு இறைச்சி, ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டது அந்த இறைச்சியை  நாய் இறைச்சி என்று தவறாக ஒரு சில அதிகாரிகளும்  ஊடகங்களும் கூறியதன் காரணமாக கடந்த வாரம் சென்னையில் பெருமளவில் ஆட்டு இறைச்சி விற்பனை ஆகவில்லை. குறிப்பாக சென்னையில் புளியந்தோப்பு வில்லிவாக்கம் சைதாப்பேட்டை பல்லாவரம் ஆகிய இடங்களில் உள்ள ஆட்டு இறைச்சி கூடத்தில்  நாள்தோறும் 4 ஆயிரம் ஆடுகள் வெட்டி சென்னை முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் புளியந்தோப்பில் மட்டும் 3 ஆயிரம் ஆடுகள்  வெட்டப்படுகிறது. இதுவே ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை முழுவதும்  10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ஆடுகள் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நாய்க்கறி என்ற பிரச்னையால் மொத்தமே 2 ஆயிரம் ஆடுகள் மட்டுமே வெட்டி விற்பனை செய்யப்பட்டது. இது வியாபாரிகளிடையே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட ஆட்டு இறைச்சியை சோதனை செய்த அதிகாரிகள் இது ஆடு தானா என்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாடு, ஆந்திரா,  கர்நாடகாவில் உள்ள ஆடுகள் மட்டுமே வால் குட்டையாக இருக்கும். மற்ற மாநில ஆடுகள் வால் நீளமாக காணப்படும். அதை பார்த்த அதிகாரிகள் நாய் இறைச்சி என்று தவறாகக் கூறியதன்   காரணமாக பெருமளவில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். பிரச்சினைக்கு முக்கிய காரணம் தமிழக அரசின் விதிகள் தான். அதனால்,  வெளிமாநிலங்களில் ஆட்டு இறைச்சி குறைந்த விலைக்கு கிடைப்பதால் தான்  வியாபாரிகள் அங்கு சென்று இறைச்சிகளை வாங்கி வருகிறார்கள்.

 வடமாநிலங்களில் இருந்து 95 சதவீதம் உயிரோடு இருக்கும் ஆடுகள் தான் கொண்டு வரப்படுகிறது. ஆந்திரா மாநிலம் வரை பர்மிட் இருப்பதால் கொண்டு வருவதற்கு சிரமம் இல்லை. ஆனால் தடாவை தாண்டி சென்னைக்குள் கொண்டு வருவதற்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால் இறைச்சியை கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுத்து வெளிமாநிலத்தில் இருந்து கொண்டுவரப்படும் ஆட்டிறைச்சிக்கு அனுமதி தர வேண்டும். மேலும் வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் ஆட்டு இறைச்சிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க மாநகராட்சியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையில் 4 ஆடு, மாடு அறுக்கும் இறைச்சி கூடங்கள் உள்ளது. அதை, 8 இடங்களாக அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கூடங்கள் அனைத்தும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெளிமாநிலங்களில் இருந்து கெட்டுப்போன இறைச்சியை கொண்டுவருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ரயில் மூலம் சுகாதாரமற்ற முறையில் கொண்டுவந்த ஆட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர் மேலும் இதுபோல ஆட்டிறைச்சி கொண்டு வருவதற்கு கடுமையான விதிமுறைகள்  விதித்தால்  இந்த நிலை ஏற்படாது. வெளிமாநிலங்கள் போல் தமிழகத்தில் ஆடுகள் கொண்டுவருவதற்க்கு அனுமதி வழங்கினால் வெளிமாநிலத்தில் விற்கப்படும் ஆட்டு இறைச்சியின் விலையின் அளவில் தமிழகத்திலும் குறைந்த விலைக்கு ஆட்டு இறைச்சி விற்கப்படும். வெளி மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் கொண்டு வரப்படும் ஆட்டு இறைச்சிகளுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்க  மாநகராட்சியும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: