நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதா?

ஆரோக்கியமான உணவைச் சாப்பிட வேண்டும் என்றுதான் அனைவருமே நினைப்போம். ஆனால், மாலையில் வேலை முடிந்து லைட் பசியோடு வீட்டுக்குச் செல்லும் வழியில் கொத்து பரோட்டா கடைக்காரர் தோசைக் கல்லில் தாளமிடும்போது வீதியில் கசியும் வாசம் நம்மையும் அறியாமல் நாசிக்குள் நுழைந்து மூளையைத் தாக்க; தன்னாலேயே வண்டி பிரேக் போடும். கால்கள் கடைக்குள் செல்லும். என்றாவது ஒருநாள்தானே என்று வெளுத்து வாங்குவோம். வயிறு நிறைந்ததும் வீட்டுப் பாசம் முட்டிக்கொண்டு வர, குழந்தைகளுக்கும் மனைவிக்கும் கொஞ்சம் பார்சல் வாங்கிக்கொண்டுபோவோன்.

இது எத்தனையோ வீடுகளில் எப்போதும் நடைபெறும் வாடிக்கையான விஷயம்தாம். நாம் சாப்பிடுவது ஆரோக்கியம் இல்லை என்பது நமக்கே நன்கு தெரியும். நாக்குக்கு ருசியாக இருந்தால் போதும். மற்றதெல்லாம் பற்றி ஏன் யோசிக்க வேண்டும் என்ற மனோபாவம் எப்படியோ நம்மிடையே ஒட்டிக்கொண்டது. அதன் விளைவுதான் முப்பது வயதில் தொப்பை, நாற்பது வயதில் உயர் ரத்த அழுத்தம், ஐம்பது வயதில் சர்க்கரை வியாதி, அறுபது வயதில் ஹார்ட் அட்டாக் என்று முறைவைத்து வந்து முடக்கிவிடுகிறது.
alignment=

இந்தியா எதில் முன்னணியில் இருக்கிறதோ இல்லையோ நோய்களில் நாம்தான் யாரைவிடவும் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும். உலகிலேயே அதிகமான சர்க்கரை நோயாளிகளைக்கொண்ட நாடு, இதய நோயாளிகள் பட்டியலில் மூன்றாவது இடம். உயர் ரத்த அழுத்தம் உடையவர்களிலும் நாம்தான் முன்னணி. இப்படி மொத்த தேசமும் மருத்துவமனைக்குள் வசித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு மிக அடிப்படையான காரணம் நம்முடைய உணவுமுறையில் ஏற்பட்ட மாற்றமும் அதனால் ஏற்பட்ட கோளாறுகளும்தான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘நீங்க ஹெல்த்தியான உணவுமுறையைத்தான் பின்பற்றுகிறீர்களா?’ இந்தக் கேள்வியைக் கேட்டால் கிட்டதட்ட அனைவருமே ஆமாம் என்ற பதிலைத்தான் சொல்வார்கள். படிப்பு அல்லது வேலையின் நிமித்தம் ஹாஸ்டலில் தங்கியிருப்பவர்கள், வெளியூரில் தங்கியிருப்பவர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் சாப்பிடும் உணவு இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்ற போதாமை உணர்வு இருக்கலாம். உண்மையில் அவர்களுமேகூட ’வீட்டு சாப்பாடு சாப்பிடாமல் நாக்கு செத்துப்போச்சு என்று நாக்குகாகத்தான் கவலைப்படுகிறார்களே தவிரவும் வயிற்றை நினைத்துப் பார்ப்பதே இல்லை. ஆனால், இவர்களைத் தவிர பெரும்பாலானவர்கள் தங்களிடம் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் உள்ளதாகவே கருதுகிறார்கள்.
alignment=

தமிழகத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, இங்கு ஐந்தில் ஒருவருக்கு ஒபிஸிட்டி எனும் உடல் பருமன் பிரச்சனை உள்ளது என்கிறது. அதாவது மொத்த மக்கள்தொகையில் இருபது சதவீதம் பேர் குண்டாக உள்ளார்களாம். மேலும், இதே ஆய்வில் ஐந்தில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்திருக்கிறது. இந்தப் புள்ளிவிவரம் சொல்வது என்ன?

ஒரு பக்கம் ஒருவர் நிறைய உண்டதால் நோயாளியாக மாறியிருக்கிறார். மறுபுறம் ஒருவர் போதுமான அளவு உண்ணாததால் நோயாளியாகியிருக்கிறார். அப்படியானால் இவர்கள் இருவரும் வேறு வேறு நபர்களா என்று கேள்வி எழுகிறது. ஆமாம். இந்த இரு வேறு தரத்தினர் கணிசமாக இங்கு உள்ளார்கள்தான். ஆனால், அதிகமாக உண்பவர்கள் அனைவரும் ஹெல்த்தியாக உண்கிறார்கள் என்றும் பொருள் இல்லை. கையில் கிடைத்த கண்டதையும் வெளுத்து வாங்குவது நன்கு உண்பது என்ற வகையில் வராது. பசிக்கும்போது அளவாக, ஹெல்த்தியானவற்றைச் சாப்பிடுவது மட்டுமே ஹெல்த்தி என்கிறார்கள் மருத்துவர்கள். இப்படி அதிகம் உண்ணும் மக்கள், உண்ணவே கிடைக்காத மக்கள்  என இரு தரப்பினர்களுக்கு இடையேதான் நமது சராசரி ஆரோக்கியம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

alignment=

தமிழர்கள் என்று பொதுவாகச் சொன்னாலும் நம் அனைவருக்குமே பொதுவான உணவுப் பழக்கங்கள் கிடையாது. ஒவ்வொரு சமூகத்துக்கும் மட்டும் அல்ல ஒவ்வொரு குடும்பத்துக்கும், ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் இடையேகூட வித்தியாசமான உணவுப் பழக்கங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் அந்தக் குடும்பத்தின் பாரம்பரியமான தொழில், சமூகச் சூழல், அந்தஸ்து, பொருளாதார நிலை ஆகியவற்றால் பன்நெடுங்காலமாக உருவாகிவந்தது. இந்த அடிப்படை சூழல்கள் மாற மாற உணவுப் பழக்கம் சிறிது மாறினாலும் பெரும்பாலான குடும்பங்களில் அது அப்படியேதான் தொடர்கிறது. இந்தப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்பவே நம்முடைய ஆரோக்கியத்தின்

நிலையும் அமைகிறது.

இந்தியாவுக்கு பெஸ்ட் டயட் எதுவென்று கேட்டால், பேலன்ஸ்டு டயட் எனப்படும் சமச்சீர் உணவுதான் பெஸ்ட் என்கிறார்கள் சர்வதேச உணவியல் நிபுணர்கள். ஆனால் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் இன்று சமச்சீரான உணவுகளைத்தான் உண்கிறார்களா? என்று கேட்டால் இல்லை என்பதே எதார்த்தமான பதிலாக இருக்கிறது. மிகக் குறைந்த சதவீதத்தினரே ஒரு எழுபது சதவீதம் சரியான பேலன்ஸ்ட் டயட்டைப் பின்பற்றுகிறார்கள். மற்றபடி பெரும்பாலானவர்கள் ஏதேனும் குறிப்பிட்ட சத்துள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளை மட்டுமே தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஃபுட் டைவசர்சிட்டி என்று ஒரு கருத்தாக்கம் உள்ளது. உணவுப் பன்முகத்தன்மை என்று இதைச் சொல்வார்கள். ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் என்பது அனைத்து வகையான உணவுகள், சத்துகளையும் உண்பதுதான். நம்மிடம் இந்த ஃபுட் டைவர்சிட்டி மிகவும் குறைவாக இருக்கிறது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய பிரச்சனை.

நாம் உண்ணும் உணவை அவை கொண்டிருக்கும் சத்துக்களின் அடிப்படையில் ஏழு வகைகளாகப் பிரிக்கலாம். கார்போஹைட் எனும் மாவுச்சத்து, புரோட்டின் எனும் புரதச்சத்து, ஃபேட் எனப்படும் கொழுப்புச்சத்து, வைட்டமின்கள் எனும் ஊட்டச்சத்துகள், மைக்ரோ நியூட்ரியண்ட்ஸ் எனப்படும் நுண்ணூட்டச்சத்துகள், மினரல்ஸ் எனப்படும் தாதுஉப்புகள், ஃபைபர் எனப்படும் நார்ச்சத்து. இந்த ஏழும்தான் நம் உடலுக்குத் தேவையான அடிப்படையான ஃபுட் டிவிசன்ஸ்.

அரிசி, கோதுமை, சிறுதானியங்கள், ஓட்ஸ் போன்றவற்றில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. சிறுதானியங்கள், முழு தானியங்கள், பருப்புகள் போன்றவற்றில் புரோட்டின் நிறைந்துள்ளது. பால், மீன், முட்டை, மாமிசங்களில் கொழுப்புச்சத்து நிறைந்துள்ளது. காய்கறிகள், கீரைகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றில் எஞ்சிய சத்துகளான ஊட்டச்சத்துகள், நுண்ணூட்டச்சத்துகள், தாதுஉப்புகள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இந்த அனைத்தையும் சரியான விகிதத்தில் கொண்டிருக்கும் உணவுப் பழக்கமே ஃபுட் டைவர்சிட்டி நிறைந்த உணவுப் பழக்கம்.

மேலும், இவற்றிலும் சில முக்கியமான பகுப்புகள் உள்ளன. எல்லா காய்கறிகள், பழங்களிலும் நார்ச்சத்து, நீர்ச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் ஏ,சி,இ மற்றும் பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் ஆகியவை இருந்தாலும் அவற்றிலும் சில முக்கியமான பிரிவுகள் உள்ளன. முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவையும் முருங்கைக் கீரை உள்ளிட்ட பிற கீரைகளும் ஒருவகை. இவற்றில் பச்சையம் நிறைந்த இலையின் சத்துக்கள் இருக்கும். அவரை, கொத்தவரங்காய், பீன்ஸ் போன்ற லெக்யூம்ஸ் ஒருவகை, இவற்றில் விதையின் சத்துக்கள் இருக்கும். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, கருணைக் கிழங்கு, மரவள்ளி, சர்க்கரைவள்ளி போன்ற கிழங்குகள் இன்னொருவகை இவற்றில் வேரின் வாயுத்தன்மை நிறைந்த மாவுச்சத்து இருக்கும்.

இப்படி, ஒவ்வொரு உணவுப் பொருளிலும் ஒவ்வொருவகையான சத்துக்கள் உள்ளன. நம் மனித உடலுக்கு இந்த அத்தனை சத்துகளுமே குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும். நம்முடைய ஒட்டுமொத்த உணவுப் பழக்கத்தில் மேற்சொன்ன அத்தனை உணவுப் பிரிவுகளிலும் சுமார் எண்பது சதவீதமாவது இருக்க வேண்டும். இப்போது நம்மை நாமே கேட்டுக்கொள்வோம் நாம் அப்படித்தான் பரவலாக அனைத்துச் சத்துக்களையும் எடுத்துக்கொள்கிறோமா?

ஃபுட் டைவர்சிட்டி பரவலாக இல்லாதபோது அது ஒரு குறைபாடாக மாறுகிறது. நம் உடல் ஏதோ ஒரு சத்தை இழந்ததைப் போல் உணரும். ஆனால், இதுதான் என்று சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. சில குழந்தைகள் மண்ணை அள்ளி வாயில் போடுவதை கவனித்திருக்கிறீர்களா? இன்னும் சில குழந்தைகள் சுவரின் சுண்ணாம்பை நாவால் நக்கும் அல்லது விரலால் பிய்த்து வாயில்போடும்.

உண்மையில், இப்படியான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து போதாமை இருக்கிறது என்று பொருள். காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் போன்றவற்றைப் போதுமான அளவு கொடுத்தால் அந்தக் குழந்தை இப்பழக்கத்தில் இருந்து தன்னால் வெளிவரும். அதைவிட்டுவிட்டு அக்குழந்தையை எத்தனை அடித்தாலும் மிரட்டினாலும் அது உதவாது. அதன் உடல் அந்தச் சத்துப் போதாமையை வேண்டும் என்று கேட்டால் அது என்ன செய்யும் பாவம். ஃபுட் டைவர்சிட்டி சரியான விகிதத்தில் இல்லாவிடில் நம் உடலிலும் இப்படித்தான் நிகழும். ஆனால், நாம் பெரியவர்கள் என்பதால் இப்படி கல்லையும் மண்ணையும் உண்ணாமல் கடைக்குப் போய் கண்டதையும் உண்டு வயிற்றையும் கெடுத்து, பர்ஸையும் பரிதவிக்கவிடுகிறோம்.

ஃபுட் டைவர்சிட்டி ஒரு முக்கியமான பிரச்சனை. தொடர்ந்து நம் உடலின் நியாயமான சத்துக்குறைபாட்டை நாம் கண்டுகொள்ளாமல் விடும்போது உடலால் உணர முடியாத அந்த சத்தின் மீதான பசிதான் பின்னர் ஏதேனும் நோயாக மாறுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது அப்படியான அரூப பசியின் வெளிப்பாடுதான். நமது உடலில் குறிப்பிட்ட சத்துப் போதாமை ஏற்படும்போது அதனால் உடலின் வேதியல் சமநிலை குலைகிறது. வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, துத்தநாகம், ஃபோலிக் அமிலம், ஐயோடின், தயமின் ஆகியவை நம் உடல் சிறப்பாக இயங்க மிகவும் முக்கியமான சத்துக்கள். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வில் உலகம் முழுதும் சுமார் இருபது கோடி பேருக்கு மேல் இப்படியான சத்துப்போதாமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சத்துப் போதாமை என்றதும் ஏதோ வறுமையால்தான் உருவாகிறது என்று நினைக்க வேண்டாம். நன்கு வசதியான சூழலில் வசிக்கும் ஒருவருக்குக்கூட சத்துப்போதாமை இருக்கிறது. அதற்குக் காரணம் அவரின் உணவுப் பழக்க வழக்கத்தில் உள்ள போதாமை. குறிப்பாக, இன்று தமிழகத்தில் நகரத்தில் வாழும் இளைய சமூகத்துக்கு சத்துப் போதாமை மிக முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. ஸ்டைல், ஃபேஷன், ட்ரெண்ட் என்ற பெயரில் எந்தவிதமான சத்துக்களும் இல்லாத ப்ராசஸ்டு உணவுகள், சாட் உணவுகள், நொறுக்குத் தீனிகள், பீஸா, பர்க்கர், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற ஜங்க் ஃபுட்ஸ் மட்டுமே உண்டுவிட்டு கோலா பானங்கள், டீ, காபி போன்றவற்றை மட்டுமே பருகுவதால் உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் சேராமலே போய்விடுகின்றன.

இந்திய அளவில் இரும்புச்சத்து குறைபாடு கொண்ட வசதியான இளம்பெண்களில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்திருப்பதே இதற்கு சாட்சி. இரும்புச்சத்துக் குறைபாடு நமது பாடுபடும் திறனைக் குறைப்பதோடு பெண்களுக்கு கர்ப்ப கால சிக்கல்களையும் உருவாக்குகின்றன என்பதை நாம் உணர வேண்டும். பொதுவாகவே இந்தியர்கள் ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வதில் கொஞ்சம் மோசம்தான் என்கிறார்கள். நகர்ப்புற இந்தியர்கள் பெரும்பாலானோர் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ சத்தில் வெறும் இருபத்திரண்டு சதவீதம் மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் ரிபோஃப்ளேவின் எனப்படும் வைட்டமின் பி2 தேவையான அளவில் பாதிதான் உடலில் சேர்கிறது. கால்சியம் தேவையில் அறுபத்து ஏழு சதவீதமும் இரும்புச்சத்துத் தேவையில் எழுபத்து ஏழு சதவீதமும்தான் எடுத்துக்கொள்கிறோம்.

தமிழகத்தைப் பொருத்தவரை நாம் அரிசியை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதுதான் மிகப் பெரிய பிரச்சனை. அரிசியில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்துள்ளது. உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருவதிலும் ரத்தத்தில் உடனடியாக சர்க்கரையைச் சேர்ப்பதிலும் கார்போஹைட்ரேட் நிகர் இல்லாதது. ஆனால், உடலில் சேரும் கார்போஹைட்ரேட் மூலம் உருவாகும் ஆற்றல் சரியான விகிதத்தில் உடலைவிட்டு வெளியேறாவிடில் அது உடலிலேயே கொழுப்பாகத் தங்கிவிடுகிறது. அதன்விளைவுதான் உடல் பருமன், தொப்பை, உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை.

ஒருபுறம் சிலர் கொழுப்புச்சத்து உணவுகளைச் சாப்பிடுவதே கிடையாது. மறுபுறம் சிலர் காலையில் கண் விழிப்பதே அசைவத்தில்தான். நள்ளிரவுகூட அரைக் கோழியை விழுங்கிவிட்டு சாப்பிடப்போகிறவர்கள் இருக்கிறார்கள். கார்போஹைட்ரேட், கொழுப்புச்சத்து என்று இல்லை எந்த ஓர் உணவை அதன் தேவைக்கு மீறி அதிகமாகச் சாப்பிட்டாலும் வில்லங்கம்தான். காலை உணவைத் தவிர்க்கவே கூடாது. அதனால்தான் ஆங்கிலத்தில் அதை ப்ரேக் ஃபாஸ்ட் என்கிறார்கள். ஃபாஸ்டிங் என்றால் விரதம். காலை உணவு என்பது தொடர்ந்து பன்னிரெண்டு மணி நேரம் உண்ணாமல் இருக்கும் விரதத்தை முறித்துக்கொள்வது. அதிகாலை உணவுதான் அன்றைய நாளுக்குத் தேவையான அடிப்படையான எனர்ஜியைத் தருகிறது.

இரவு முழுதும் வளர்சிதை மாற்றம் நிகழ்ந்தபின் உருவான புதிய செல்கள் தங்களுக்கான சத்துகளை வேண்டி காத்திருக்கும். மறுபுறம், உணவைச் செரிப்பதற்கான அமிலங்கள் வயிற்றில் சுரந்து தயாராக இருக்கும். இது எல்லாம் பல லட்சம் ஆண்டுகள் மானுடப் பழக்கம். நாம் திடீரென அதிகாலை சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் உடலின் இந்த சமநிலை குலையும். செரிமானக் கோளாறுகள் முதல் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும். எனவே, காலையில் அவசியம் உண்டுவிட வேண்டும்.

அதிலும் காலையில் வயிறுமுட்ட நிறைவாக அனைத்துச் சத்துகளும் இருக்கும்படி சாப்பிடலாம். மதிய நேரத்தில் காலையில் உண்டதில் பாதி உணவை உண்ணலாம். இரவு நேரத்தில் மதியம் உண்டதில் பாதி உண்ணலாம். அதுபோலவே காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையிலும் மாலை நேரத்திலும் ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் சாப்பிடலாம். காலை முதல் இரவு வரையான உணவில் ஃபுட் டைவர்சிட்டி முழுமையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்றாடமும் மூன்று வேளையும் அரிசி என்பதற்குப் பதிலாக ஏதேனும் ஒருவேளை சிறுதானியங்களைச் சேர்க்கலாம். சிறுதானியங்களில் கார்போஹைட்ரேட் மட்டும் இல்லை. அதில் புரதச்சத்தும், நார்ச்சத்தும், நுண்ணூட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. சிலவற்றில் கொழுப்புச்சத்துகூட கணிசமாக உள்ளது. போன நூற்றாண்டு வரை நம் முன்னோர் சிறுதானியங்களைத்தான் அதிகமாகச் சாப்பிட்டுவந்தார்கள் என்பதை நாம் இங்கு நினைவுகூர வேண்டும். எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை உண்டுகொண்டு இருக்காமல் ஊட்டச்சத்து நிறைந்த பல்வேறு வகையான உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களைக் கைவிடுவது என்று இருந்தாலே நோய் நொடி

நெருங்காமல் வாழ்வாங்கு வாழலாம்.

- இளங்கோ கிருஷ்ணன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: