ஊரான் ஊரான் தோட்டத்திலே...ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா...

பசுமைப் புரட்சி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என எப்படித் தொடர்ந்து மேற்குலக நாடுகளும் அதன் பகாசுர நிறுவனங்களும் தொடர்ந்து நம் வேளாண்மையைத் தங்களின் வணிக நலன்களுகாகப் பயன்படுத்திக்கொண்டன என்று பார்த்துவருகிறோம். உலகமயமாக்கலின் விளைவாக புதிய சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப அந்நிய விவசாய கம்பெனிகளின் நலனின் பொருட்டு செயல்பட வேண்டிய நிர்பந்தம் நமது அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, எடுப்பார் கைப்பிள்ளை போல புதிய புதிய சட்டங்கள், விவசாயத்தின் இயல்பையே சிதைக்கும் திட்டங்கள் என்று அரசு விவசாய நலன்களுக்கு எதிரான பாதையில் வேகமெடுக்கிறது. விவசாய விளைப் பொருட்கள் விற்பனைக் குழுச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தியதைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருட்களை கட்டுப்படுத்தப்பட்ட சந்தைகள் மூலமே அனுமதியளித்துவந்த இந்த ஏபிஎம்சி சட்டம்.

இந்த கட்டுப்பாட்டை நீக்கி இனி தனியார் நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துகொள்ளலாம் என்ற புதிய திருத்தத்தை வெளியிட்டது. பார்ப்பதற்கு நல்ல திட்டம்தானே என்று தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள நடைமுறை சிக்கல் விவசாயிகளின் முதலுக்கே மோசமாக முடியக்கூடியது. ஆமாம்! விவசாய நிலங்களை அந்நியர்கள் கைப்பற்றி அதே நிலத்தில் அவர்களை விவசாயக் கூலியாகச் செய்யும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் நிறைந்த சுதந்திரம் இது.

இதன் உச்சகட்டமாக ஒப்பந்த விவசாயம் எனும் பண்ணை அடிமை முறையே நடைமுறைக்கு வரும். நமது விவசாய அமைப்பின் விதைகள், இடுபொருட்கள், உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், விற்பனை ஆகிய எல்லா அம்சங்களையும் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற திட்டத்தோடு பெரிய தனியார் நிறுவனங்கள் இந்த ஒப்பந்த விவசாயம் எனும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

இதன்படி ஒரு நிலத்தின் விவசாயிக்கும் ஒரு விவசாய நிறுவனத்துக்கும் இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விலை நிர்ணயிக்கப்படும். விளைபொருட்களின் அளவு, தரம், மதிப்பு ஆகியவை முன்கூட்டியே தீர்மானிக்கப்படும். இந்த ஒப்பந்தப்படி குத்தகை தாரரான நிறுவனம் விளைச்சலுக்குத் தேவையான இடுபொருட்கள் அனைத்தையும் வழங்குவார். விவசாயி தன்னுடைய நிலத்தில் அந்தப் பொருட்களைக் கொண்டு தன்னுடைய ஆட்கள் மூலம் விவசாயம் செய்துகொள்ள வேண்டும். பிறகு, விளைந்தபின் ஒப்புக்கொள்ளப்பட்ட விலைக்கு நிறுவனத்துக்குப் பொருட்களை வழங்க வேண்டும்.

தனியார் நிறுவனங்களின் விதைகளை ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிட இதைவிட சிறந்த ஏற்பாடு இருக்கிறதா என்ன? ஒரு கட்டத்தில் தன்னுடைய நிலத்தில் எதை விதைக்க வேண்டும். எவ்வளவு விதைக்க வேண்டும் என்ற ஏகபோகத்தைக்கூட அந்த விவசாயி இழந்துபோகிறார். அது மட்டும் அல்லாமல்; அதை என்ன விலைக்கு விற்க வேண்டும் என்றும் அந்த நிறுவனமேதான் சொல்கிறது.‘ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா(ய்) காசுக்கு ரெண்டு விற்கச் சொல்லி காகிதம் போட்டான் வெள்ளைக்காரன்’

..என்று அந்தக் காலத்தில் ஒரு நாட்டுப்புறப் பாடல் உண்டு. வெள்ளையர்கள் தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படி நம் நிலங்களில் எதை விதைக்க வேண்டும். எவ்வளவுக்கு விற்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள் என்பதைச் சொல்லும் வலி மிகுந்த கறுப்பு நகைச்சுவைப் பாடல் இது. இதே வரலாறுதான் இப்போது திரும்ப வந்திருக்கிறதோ என்று அச்சப்படும் அளவுக்கு தற்போதைய விவசாய நிலை இருக்கிறது.

இது ஏதோ வெறுமனே அச்சுறுத்துவதற்காகச் சொல்லும் விஷயம் இல்லை. இன்றைய நிலைக்கு இதுவரை, காட்பரி (கொக்கோ), பெப்ஸிக்கோ (உருளைக் கிழங்கு, மிளகாய், வேர்க்கடலை) யுனிலிவர் (தக்காளி, சிக்கரி, தேயிலை) ஐ.டி.சி (புகையிலை) கார்கில் (விதைகள்) ஆகிய அந்நிய நிறுவனங்கள் இந்த ஒப்பந்த விவசாயத்தில் இறங்கியுள்ளன. இதைத் தவிர ரிலையன்ஸ், டாட்டா, ராயல் எனர்ஜி, எஸ்ஸார், அரவிந்த் மில்ஸ், அவினி சீட்ஸ், பல்லாப்பூர் இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே.பேப்பர்ஸ், விம்கோ, யுனைடட் ப்ரூவரிஸ், அக்ரோசெல் போன்ற இந்திய நிறுவனங்களும் இந்த வணிகத்தில் குதித்துள்ளன.

இந்த முறையிலான உற்பத்திச் செயல்பாட்டில் பெரும் நிறுவனங்களுக்குப் பலவகையிலும் லாபம். தங்களது தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள் தங்கு தடையின்றி சீராகக் கிடைக்கிறது. உதாரணத்துக்கு, காட்பரி சாக்லெட் நிறுவனத்துக்கு சாக்லெட் தயாரிப்பதற்கான மூலப்பொருளான கொக்கோ அதிக செலவின்றி உற்பத்தி விலையிலேயே அந்நிறுவனத்துக்குக் கிடைக்கிறது. இதுதான் அதன் முக்கியமான அனுகூலம். மேலும், தரமற்ற மீதமாகும் கொக்கோகளை ஆப்பிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் தேவைக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

நிறுவனங்களே நேரடியாக மூலப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுவதால் வணிகர்கள், இடைத் தரகர்களின் தலையீடு இல்லாததால் லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. நிலங்கள் விவசாயிகளிடமே இருப்பதால் நிலத்துக்கு என செய்ய வேண்டிய அதிகபட்ச முதலீடும் தவிர்க்கப்படுகிறது. ரசாயன உரங்களை அளவின்றிக் கொட்டி தேவையான அமோக விளைச்சலை எடுத்துக்கொள்வதால் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால், அதன் மூலம் நிலம் பாழானால் அதற்குப் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை.

அதனால் பாதிப்பும் நிறுவனத்துக்கு இல்லை. எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்ள முடியும் என்பதால் விவசாயிகளை அந்தரத்தில் தவிக்கவிட்டுவிட்டு நழுவுவது எளிது. மேலும், இயற்கை சூழலால் விவசாயம் பொய்த்தாலும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலைக்குத்தான் விவசாயி பொருட்களைத் தருவார். எனவே, ஒப்புக்கொள்ளப்பட்ட லாபமான வணிகமே நிறுவனத்துக்கு எப்போதும் நிகழ வாய்ப்புள்ளது. ஒருவேளை விவசாயம் பொய்த்தால் அதன் சுமை விவசாயியின் தலையிலேயே விழுகிறது.

ஆனால், இதற்கான எந்தப் பொறுப்பையும் தார்மிகத்தையும் நிறுவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இத்தனை அனுகூலங்கள் நிலத்தை வாங்கிப் பயிரிடுவதில் கிடைக்காது அல்லவா? ஒப்பந்த விவசாயத்தில் இன்னொரு விஷயம். ஒப்பந்த நிறுவனம் தரும் விதைகளையே விவசாயி பயிரிட வேண்டும் என்பது.

இதன்படி விவசாயிகளுக்குத் தெரியாமல்கூட மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகள் தலையில் கட்ட முடியும். மேலும், இந்த நிறுவனங்களின் ஒப்பந்தங்களை நம்பி ஒரே பயிரை ஏக்கர் கணக்கில் விதைத்து அறுவடை செய்த பிறகு அது எந்த காரணத்தின் நிமித்தம் தரமானதாக இல்லாமல் போனாலும் அந்த விளைச்சலை ஏற்க மறுக்கும் அதிகாரம் நிறுவனத்துக்கு உண்டு.

எனவே, மிகக் குறைவான விலைக்கு அதாவது நட்டத்துக்கு அதைக் கொடுக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு உருவாகிறது. சில தருணங்களில் அறுவடை செய்வதற்குக்கூட காசில்லாமல் பயிர்களை தீவைத்து எரித்துவிட்டுபோகும் சம்பவங்கள் தற்போது நாடு முழுதும் நிறைய நடந்துகொண்டிருக்கின்றன.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அடிப்படையான உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொண்டிருந்த இந்திய விவசாய நிலங்களை அவுனி, ரப்பர், பருத்தி, யூகலிப்டெஸ், தேயிலை, காபி, கரும்பு என்று பணப்பயிர்களாக மாற்றியது வெள்ளையர்கள் என்றால் புகையிலை, கொக்கோ என இன்னொருவகை பணப்பயிர் விளையும் நிலங்களாக மாற்றியதுதான் இந்த பெரிய நிறுவனங்களின் சாதனை.

உண்மையில் இந்த நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களான நொறுக்குத் தீனிகள், சாக்லெட் போன்றவற்றால் யாருக்காவது ஏதேனும் நன்மை இருக்கிறதா? இன்னும் சொல்லப்போனால் உடலுக்கு மிக மோசமான கேடுகளை உருவாக்கும் பொருட்களாகவே இவை இருக்கின்றன.

இன்று இந்தியாவில் இருபது சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மேலும் இந்தியக் குழந்தைகளில் கணிசமானவர்கள் ஒபிஸிட்டி எனும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இதற்கும் இந்த நொறுக்குத் தீனிகளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். தொடர்ந்து உடலில் கெட்ட கொழுப்பைச் சேர்க்கும் இந்த நொறுக்குத் தீனிகளை உண்ணும்போது உடல்பருமன், உயர்  ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் உருவாகின்றனவாம்.

இப்படி, ஒருபுறம் நம் நாட்டின் எதிர்காலமான குழந்தைகளின் உடல் நலனைக் கெடுக்கும் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்காக நம் விவசாயிகளின் வாழ்வில் எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் விளையாண்டுகொண்டிருக்கின்றன இந்நிறுவனங்கள். அரசின் தொடர்ச்சியான பாரமுகத்தால் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கும் விவசாயத்தை மீட்டு எடுப்பதற்காக எத்தகைய ரிஸ்க்கையும் எடுக்கத் துணியும் விவசாயிகள், வேறு வழியின்றி இத்தகைய நிறுவனங்கள் கையில் சிக்கிக்கொண்டு புலி வால் பிடித்தது போல் மருகிக்கொண்டிருக்கிறார்கள்.

பெப்ஸிக்கோ நிறுவனம் தங்களது ’லேஸ் சிப்ஸ்’ தயாரிக்கத் தேவையான உருளைக் கிழங்குகளை விளைவிக்க மட்டும் இருபத்தேழாயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது என்கிறார்கள். இது ஒரு சாம்பிள் மட்டுமே. இப்படி பல நிறுவனங்கள் களத்தில் குதித்து இன்று விவசாயத்தையே கபளிகரம் செய்துகொண்டிருக்கின்றன.

மண்ணக் காத்து மக்களைக் காக்கும் எத்தனையோ பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இன்றும் உள்ளன. கண்ட கண்ட நிறுவனங்களை நம்பாமல் நம் உழைப்பை நம்பினாலே பொன்னாய் கொடுக்கும் பாரம்பரிய நெல் ரகங்கள் இவை. இவற்றில் ஒன்றுதான் வால் சிவப்பு நெல். தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பாலம் மற்றும் கீவலுார் பகுதிகளில் நன்கு வளரக் கூடிய நெல் ரகமாகும் இது.

145 - 150 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் ரகம், சுமார் 160 செ.மீ உயரம் வரையில் வளரக் கூடியது. சிவப்பு நிறத்தில் உள்ள இதன் நெல் மணியின் பின்புறத்தில் உள்ள சிறுமுள் பறவை ஒன்றின் வால் போன்று தோன்றும் என்பதால் இதற்கு வால் சிவப்பு என்று பெயர். மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களுக்கு ஏற்ற ரகமான வால் சிவப்பு, செப்டம்பர் 15ல் தொடங்கும் பின் சம்பா பட்டத்துக்கு ஏற்றதாகும்.

தமிழகத்தின் திருவள்ளூர், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்தப் பட்டத்தில் (பருவத்தில்) வேளாண்மை நடந்துகொண்டிருக்கிறது. எனவே, இந்தக் காலகட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்றது. வால் சிவப்பு நெல், ஒரு ஏக்கருக்கு சுமார் 900 கிலோ வரையில் (75 கிலோ பையில், 12 பைகள்) விளைச்சல் தரக்கூடியது. சிவப்பு அரிசியின் பயன்கள் அனைத்தும் நிறைந்த இது செரிமானத்தை எளிதாக்குகிறது. வளரும் குழந்தைகள், உடல் பலகீனமானவர்களுக்கு மிகவும் உகந்தது.

(செழிக்கும்)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: