இது விளையாட்டு மேட்டரில்லை!

விளையாடுவது எல்லாருக்கும் பிடிக்கும். இதுற்கு வயசு வித்தியாசம் ஏதும் கிடையாது. தாத்தா, பாட்டி காலத்தில் கில்லி, பம்பரம், பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம்ன்னு நிறைய விளையாட்டு விளையாடுவோம். இன்றைய போட்டி நிறைந்த அவசர காலக்கட்டத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை காலில் சக்கரம் கட்டிக் கொண்டு வேலை, படிப்பு, பாட்டு, டான்ஸ், கீபோர்டுன்னு ஓடிக்கிட்டு இருக்கோம்.

இந்த ஓட்டத்தை விளையாட்டால் ஒரு சில மணி நிறுத்தி வைத்துள்ளார் சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார் சுப்பிரமணியன், பம்பரம் பொம்மை லைப்ரரியின் நிறுவனர். சுப்பிரமணியன், எம்.பி.ஏ பட்டதாரி. படிப்பை முடித்தவர், மார்க்கெட்டிங் துறையில் மும்பையில் நல்ல சம்பளத்தில் வேலைப் பார்த்து வந்தார்.‘‘வேலை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு மறுபக்கம் தொண்டு செய்யணும்ன்னு விருப்பம் இருந்தது. அப்பத்தான் சில்ட்ரன் டாய் பவுண்டேஷன் என்ற அமைப்பை பற்றி கேள்விப்பட்டேன்.

அதில் இணைந்து செயல்பட ஆரம்பிச்சேன். இவங்க வேலையே சேரியில் (slum) வாழும் குழந்தைகளுக்கு பொம்மைகளை விளையாடக் கொடுப்பது தான். அதாவது ஒரு பெரிய வேன் நிறைய பொம்மைகள். அந்த வேன் வாரத்தில் ஒரு நாள் சேரிக்கு செல்லும். அங்கு ஒரு மணி நேரம் இருக்கும். குழந்தைகள் வேனில் இருக்கும் பொம்மைகளை எடுத்து விளையாடலாம். ஒரு மணி நேரம் கழித்து பொம்மைகளை பெற்றுக் கொண்டு வேன் கிளம்பிடும். இந்த பொம்மைகள் எல்லாம் புதுசு கிடையாது.

மற்றவர்கள் விளையாடி வேண்டாம் என்று தூக்கிப் போட்ட பொம்மைகள். மற்றவர்கள் வேண்டாம் என்று நினைப்பது ஒருவருக்கு வேண்டியதாக இருக்கும். அப்படித்தான் இந்த பொம்மைகளும்.வேன் வரும் போது, சேரியில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் சந்தோஷத்தோடு ஓடி வரும் காட்சியை பார்க்கும் போது நம்முடைய மனமும் சந்தோஷத்தில் தாண்டவமாடும். என்ன இந்த பொம்மைகளை அவர்களே வைத்துக் கொள்ள முடியாது. அன்று விளையாடிவிட்டு மறுபடியும் வேனில் வைத்துவிடவேண்டும்.

இருந்தாலும் அந்த சில மணி நேர சந்தோஷம் கொடுக்க முடிகிறதே என்ற மன திருப்தி ஏற்படும்’’ என்றவர் இதே போன்ற ஒன்றை சென்னையில் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்த அடுத்த நிமிடமே சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார்.‘‘இந்த அமைப்புடன் நான் சில காலம் வேலைப் பார்த்து வந்தேன். அதே போல வேறு சில குழந்தைகளுக்கான அமைப்பு இருக்கான்னு விசாரிச்ச போது, சென்னையில் வித்யாரம்பம்ன்னு ஒரு அமைப்பு இருப்பது தெரியவந்தது.

இவர்கள் சேரிகளுக்கு செல்லாமல், தென் மாவட்டங்களில் உள்ள சின்ன சின்ன கிராமத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பொம்மைகளை விளையாட கொடுத்து வந்தனர். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். அவர்களுடன் விளையாட பிடிக்கும். அதனால் இந்த அமைப்பில் முழுமூச்சாக இணைய நினைச்சேன். வேலையை ராஜினாமா செய்தேன். கிராமம் கிராமமாக சென்று குழந்தைகள் விளையாட பொம்மைகளை இந்த அமைப்பு மூலம் கொடுத்து வந்தேன்.

ஒரு மணி நேரம் கிராமத்தில் குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும் போது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கும்’’ என்றவர் கடந்த நான்கு வருடம் முன்பு பொம்மைகளை தானே தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.‘‘குழந்தைகள் பொம்மைகள் கொண்டு ஆர்வமா விளையாடுவதை பார்த்து எனக்கு அவர்களுக்காக விளையாட்டு பொருட்களை தயாரிக்கலாம்ன்னு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் எனக்கு அந்த துறை சார்ந்த அனுபவம் கிடையாது. நான் படிச்சதோ மார்க்கெட்டிங், இது தயாரிக்கும் துறை.

அதனால் எங்கு எப்படி ஆரம்பிக்கணும்ன்னு புரியல. ஆனா ஒரு விஷயத்துல மட்டும் நான் தெளிவா இருந்தேன். குழந்தைகளின் விளையாட்டு சார்ந்த விஷயம் செய்யணும்ன்னு. பொம்மைகளுக்கான நூலகம் ஆரம்பிச்சா என்னென்னு தோணுச்சு. எப்படி நூலகத்தில் புத்தகங்களை படிக்க எடுத்து சென்றுவிட்டு மறுபடியும் திரும்ப கொண்டு வந்த தருகிறோமோ, அதையே பொம்மைக்கு செய்யலான்னு தோணுச்சு. பொம்மைகளை வாங்கினேன். அதை வாடகைக்கு கொடுத்தேன்.

விரும்பும் பொம்மைகளை எங்களிடம் சொன்னா போதும். நாங்க அவங்க வீட்டிற்கு சென்று பொம்மைகளை கொடுப்போம். 15 நாட்கள் கழித்து அவர்கள் அதை திரும்ப கொடுக்கணும். எங்களின் நூலகம் சென்னை முழுக்க இயங்கி வருகிறது. குழந்தைகளுக்கு பொம்மைகளை கொடுக்கும் போது தான் அவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சது. அம்மாக்கள் போன் செய்து, இந்த பொம்மை இருக்கா அது இருக்கான்னு கேட்பாங்க.

அதன் மூலம் குழந்தைகளின் விருப்பம் மற்றும் அவர்களின் மனநிலை என்ன என்று தெரிந்து கொண்டேன்’’ என்று சொன்ன சந்தோஷ் அதன் பிறகு குழந்தைகள் கொண்டே விளையாட்டுகளை வடிவமைத்துள்ளார்.‘‘கடந்த நான்கு வருடமா இதை செய்து வருகிறேன். குழந்தைகளுக்கான பொம்மைகளை வடிவமைப்பது சுலபம் இல்லை. ஆனா அவர்களுக்கான விளையாட்டினை வடிவமிக்கலாமேன்னு தோணுச்சு. ஆனா எங்கிருந்து ஆரம்பிப்பது. குழந்தைகளின் மனநிலை என்ன, எவ்வாறு புரிந்து கொள்வதுன்னு முதலில் குழப்பமா இருந்தது.

அதற்கான ஒர்க்‌ஷாப் நடத்தினேன். இதில் குழந்தைகளின் கிரியேட்டிவ் எண்ணங்களை தூண்டிவிடுவோம். அதன் பிறகு அவர்களோ அதை செயல்படுத்த ஆரம்பிச்சிடுவாங்க. உதாரணத்திற்கு ஒரு விளையாட்டு அதில் ஒருவர் என்ன வேலை செய்கிறார் என்று குறிப்பிடுவோம். அவர்கள் என்ன பாலினம்ன்னு கண்டறியணும். எலக்ட்ரீஷியன் என்று சொன்னால் அவர் ஆண்பால். அதே போல் ஆசிரியை என்றால் பெண்பால். அதை கொண்டு ஒரு குடும்பத்தை உருவாக்கி அதில் உள்ள நபர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டோம்.

அப்போது, ஒரு குழந்தை எலக்ட்ரீஷியன் என்றால் ஆணாக தான் இருக்கணுமான்னு கேட்க அப்ப முடிவு செய்தேன். இவர்களுக்கான விளையாட்டுகளை இவர்களையே தயாரிக்க சொல்லாம்ன்னு’’ என்ற சந்தோஷ் அதன் பிறகு அரசு மட்டும் இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்காக விளையாட்டு அமைக்கும் குறித்த ஒர்க்‌ஷாப் நடத்தியுள்ளார்.‘‘எங்களின் டார்கெட் ஆறாம் முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள். முதலில் விளையாட்டினை எப்படி அமைக்கணும், அதில் என்ன ஆச்சரியமான விஷயங்களை புகுத்தலாம்ன்னு ஒரு ஐடியா கொடுப்போம்.

அதன் பிறகு அவர்களின் எண்ணங்களை இதில் எவ்வாறு கொண்டுவரலாம்ன்னு சொல்லிக் கொடுப்போம். அவர்கள் மனதில் தோன்றுவதை அமைக்கலாம். விளையாட்டு முழு வடிவம் வந்தபிறகு அதை டிசைனர் கொண்டு வடிவமிப்போம். விளையாட்டுக்கு ஒரு முகம் வந்ததும், அதை நண்பர்கள் மற்றும் உறவினர்கள், தெரிந்தவர்களுக்கு கொடுத்து விளையாட சொல்லுவோம். அவங்க பீட்பேக் தருவாங்க. சிலர் ரொம்ப அதிக நேரம் விளையாடுவதாக சொல்வாங்க. சிலர் சீக்கிரம் முடிந்துவிட்டதுன்னு சொல்வாங்க.

அதற்கு ஏற்ப விளையாட்டினை மாற்றி அமைப்போம். இப்படி எல்லாருடைய கருத்துகளை சார்ந்து ஒரு விளையாட்டு உருவாகும். அந்த விளையாட்டு அமைத்தற்கான கிரெடிட் குழந்தையே சாரும்’’ என்றவர் இது வரை 18 விளையாட்டுகளை மாணவர்கள் கொண்டே அமைத்துள்ளார்.

‘‘இது எல்லாமே போர்ட் விளையாட்டு தான். அதாவது, பரமபதம், செஸ்... போன்ற போர்ட் விளையாட்டுக்கள். என்ன இதை எல்லாம் குழந்தைகளின் டேஸ்டுக்கு ஏற்ப மாறுப்படும்.

எங்க குழுவில் ஒரு பெண், ‘ஹனி ஐ ஸ்ரங்க் த கிட்ஸ்’ன்னு ஆங்கிலப் படத்தைச் சார்ந்து ஒரு விளையாட்டு அமைத்து இருந்தாள். அந்த படத்தில் சில ரேடியேஷன் காரணமா, அப்பா தன் மகனை குள்ளமா ஆக்கிடுவார். இதில் இருந்து எப்படி அவர்கள் மீண்டு வருகிறார்கள் என்பதை கொண்டு அந்த மாணவி ஒரு விளையாட்டை வடிவமைத்து இருந்தாள். இந்த விளையாட்டில் குள்ளமான குழந்தை எப்படி வீட்டிற்குள் அம்மாவை கண்டுபிடித்து

மறுபடியும் பழைய நிலைக்கு வருகிறான் என்பது தான்.

நம்மை பொருத்தவரை அது விளையாட்டு தான். ஆனா இதை உறுவாக்க எவ்வளவு திறமை வேண்டும் என்பதை நாம் யாரும் யோசிப்பதே இல்லை. விளையாட்டினை அமைப்பதன் மூலம் அவர்கள் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை ஏற்படும். நியாபக சக்தி அதிகரிக்கும், படிப்பிலும் நல்ல மதிப்பெண் பெறுவார்கள்’’ என்றவர் இந்த விளையாட்டுகளை மார்க்கெட்டில் கொண்டு வரணும்ன்னு எண்ணம் இருப்பதாக தெரிவித்தார்.

‘‘என்னத்தான் விளையாட்டுக்கு ஒரு முழுமையான வடிவம் கொடுத்தாலும், அதன் மூலக்கரு மாணவர்கள் தான்.

அதனால் அவர்களுக்கான கிரெடிட் தரணும். குழந்தைகள் உருவாக்கிய விளையாட்டுகளை எல்லாம் முதலில் பெரிய அளவில் கொண்டு வரணும். அதற்காக விளையாட்டுகள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேசிக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் சம்மதித்தால் அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். இல்லை என்றால்  ஆன்லைனில் விற்பனை செய்யும் எண்ணம் உள்ளது.

இதையே டிஜிட்டல் முறையிலும் கொண்டு வரலாம். இப்போது அதில் ஈடுபடும் எண்ணம் இல்லை. எதையும் நாம் தொட்டு உணராமல் அதன் முழு மதிப்பு தெரியாது. தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் பல குழந்தைகள் கணினியில் தான் விளையாடுறாங்க. அதை தடுக்க தான் இந்த விளையாட்டுக்கள்’’ என்றார் சந்தோஷ் குமார் சுப்பிரமணியன்.

- ப்ரியா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: