கேஆர்எஸ் அணை பூங்காவில் ரூ.1,200 கோடி செலவில் 125 அடி காவிரி அன்னை சிலை: கர்நாடக அரசு முடிவு

பெங்களூரு: இந்தியா  மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் நோக்கத்தில் ரூ.1,200 கோடி செலவில் கே.ஆர்.எஸ். அணையை ஒட்டியுள்ள  பிருந்தாவன பூங்காவில் காவிரி அன்னைக்கு 125 அடியில் சிலை  அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா-தமிழக விவசாயிகளின்  ஜீவநாடியாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணை மண்டியா மாவட்டம், ரங்கபட்டணா  தாலுகா, கண்ணம்பாடி கிராமத்தில் உள்ளது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்ட அணையை ஒட்டி அழகிய பிருந்தாவன பூங்கா உள்ளது. இதில் கர்நாடகம்  மட்டுமில்லாமல் நாட்டின் பல மாநிலங்களில் உள்ள திரையுலகினர் படப்பிடிப்பு நடத்துகிறார்கள்.

இந்நிலையில்,  பிருந்தாவன பூங்காவில் சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும்  வகையில் டிஸ்னிலாண்ட் மாதிரியில் பூங்காவும், அதில் 125 அடி உயரத்தில்  காவிரி அன்னைக்கு சிலையும், அதையொட்டி 360 அடி உயரத்திற்கு மின் விளக்கு அலங்காரத்துடனான இசை நீருற்று அமைக்க திட்டமிட்டது. இது தொடர்பாக திட்ட  வரைவு தயாரித்து கொடுக்கும் பொறுப்பு ராஜஸ்தானின் ஜெய்பூரில் உள்ள  சின்சியர் ஆர்க்கிடெக் கன்சல்டன்ட் நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது.

இத்திட்டம் செயல்படுத்த  2 ஆண்டு தேவைப்படும். திட்டம் முழுமையானால் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை  வர்த்தகம் நடக்கும். அதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.30 கோடி வருவாய்  கிடைக்கும் என்பது உள்பட பல விவரங்களை தெரிவித்துள்ளது. சின்சியர்  ஆர்க்கிடெக் கன்சல்டன்ட் நிறுவனம் தயாரித்து கொடுத்துள்ள திட்ட வரைவு மீது  நீர்பாசன துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு  உயர்நிலை குழு கூட்டம் நடந்தது. அதில் சுற்றுலா துறை அமைச்சர் சா.ரா.மகேஷ்,  முதல்வரின் பொருளாதார ஆலோசகர் டாக்டர் சுப்ரமணியம், நீர்பாசனதுறை முதன்மை  செயலாளர் ராகேஷ்சிங், செயலாளர் ஜெயபிரகாஷ், காவிரி நீர்பாசன கழக இயக்குனர் பிரசன்னா உள்ளிட்டார் கலந்துக்கொண்டனர். அதில்,  திட்ட வரைவு செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டம்  செயல்படுத்த உலகளாவிய டெண்டர் விடுவது, டெண்டர் எடுக்கும் நிறுவனத்திற்கு  மாநில அரசின் சார்பில் நிலம் மட்டுமே ஒதுக்கி கொடுக்க வேண்டும், திட்ட  செலவு முழுவதும் டெண்டர் எடுக்கும் நிறுவனம் முதலீடு போட்டு முடிப்பதுடன்  அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பு ஒப்படைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.  இத்திட்டம் பற்றி வரும் 20ம் தேதி காவிரி நீர்பாசன கழக  அதிகாரிகள் கூடி இறுதி முடிவு எடுக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: