அதிமுக அரசையும், மத்திய அரசையும் ஜனநாயக வழியில் அகற்றுவது தான் இலக்கு : ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கருணாநிதியின் 100-வது நாள் நினைவையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நவம்பர் 8-ம் தேதி பெரம்பலூர் குன்னம் நகரில் தி.மு.கழகத்தின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அது வெறும் பொதுக்கூட்டம் அல்ல. போர்க்களத்திற்கான பாடிவீடு. அதனால்தான், ஜனநாயக அறப்போர் என்ற தலைப்புடன் கொள்ளைக்கார அ.தி.மு.க. ஆட்சியையும், பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் அதிகாரத்திலிருந்து அகற்றிடும் இலக்குடன் கழகத்தின் படைவரிசை அங்கே திரண்டது என கூறியுள்ளார்.

தமிழகம் பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிவதாக சாடியுள்ளார். இந்தியா மதவெறிப் பாசிச ஆட்சியாளர்களின் கொடூரப் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு. தலைவர் கலைஞரின் புகழ் வணக்க நிகழ்வுகளில் நாம் அவரது நினைவுகளில் நீந்துவதுபோலவே, அவர் கற்றுத்தந்த எதிர்நீச்சலையும் மேற்கொள்வோம் என அறிக்கையில் கூறியுள்ளார் ஸ்டாலின்.

மாநில உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு, அரசுக் கருவூலத்தைக் கொள்ளையடித்து, வருமானம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியையும் -பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை வஞ்சித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து, அமைதியைக் கெடுக்கும் மதவெறியுடன் கோலோச்சும் பாசிச பா.ஜ.க ஆட்சியையும் வீழ்த்திட, தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் நூறாவது நாளில் நெஞ்சுயர்த்திச் சூளுரைப்போம்! அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழுலகம் மகிழ, வென்று காட்டுவோம்! என ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: