போடி பகுதிக்கு 18ம் கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு

தேவாரம்: 18ம் கால்வாய் வழியே 3வது முறையாக போடி பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட ஊர்களில் உள்ள வறண்ட குளங்கள் தண்ணீர் பெறவேண்டும் என்ற நோக்கத்துடன், 18ம் கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின்படி கூடலூர் வைரவன் ஆற்றில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடி தொகுதி வரை 18ம் கால்வாய் நீட்டிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே வெள்ளோட்டம் நடந்தது. இந்நிலையில் போடி தொகுதியில் உள்ள கவுண்டன்குளம், சென்னிகிருஷ்ணன் குளம், அம்மாகுளம் உள்ளிட்ட 8 குளங்கள் வரை தண்ணீர் செல்லாமல் இருந்தது.

சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிருப்தியில் இருந்தனர். இதனை அடுத்து நிரம்பாத குளங்களுக்கு நேற்று முன்தினம் எந்த அறிவிப்பும் இல்லாமல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அனைத்து குளங்களும் நிரம்பிட வாய்ப்புகள் உண்டாகும். எனவே மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பல வருடமாக நிரம்பாத குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் விவசாய பரப்பும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: