கஜா புயல் எச்சரிக்கை : வாழை மரங்கள் சாய்வதை தடுக்க விவசாயிகள் மும்முரம்

கும்பகோணம்: கஜா புயல் காரணமாக மயிலாடுதுறை தஞ்சை சாலையில் உள்ள பட்டுப்போன மரங்கள் அகற்றப்பட்டது. தஞ்சையில் இருந்து  கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை செல்லும் சாலை மிகவும் குறுகலாக இருக்கும். இந்த சாலைகளில் 100க்கும் மேற்பட்ட திருப்பங்கள் உள்ளது. மேலும் சாலையோரத்தில் 50 ஆண்டுகள் பழமையான புளிய, தூங்குமுஞ்சி உள்ளிட்ட மரங்கள் உள்ளது. இதில் பெரும்பாலான மரங்கள் பட்டுப்போய் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பட்டுப்போன மரங்களை அகற்றுவதுடன் போக்குவரத்து இடையூறாக சாலையோரம் தொங்கி கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் வங்காள விரிகுடாவில் கஜா புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் கும்பகோணம், தஞ்சை பகுதிகளில் பலத்த காற்று வீசுவதுடன் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே கஜா புயலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு உயிர் சேதம் ஏற்படாமல் இருக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மயிலாடுதுறை வரை சாலையோரத்தில் பட்டுப்போன மரங்கள் மற்றும் தொங்கி கொண்டிருந்த மரங்களை அகற்ற வேண்டுமென உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த 2 நாட்களாக கும்பகோணம் அடுத்த உத்தாணி, பாபநாசம், சுந்தரபெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் இருக்கும் பட்டுப்போன மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது. இதேபோல் கஜா புயலால் வாழை மரங்கள் சேதமடையாமல் இருக்க மரங்களுக்கு முட்டு கொடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: