நெல் வாங்காத அரசு கொள்முதல் நிலையங்கள் தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசின் வேலை?: ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் நெல் வாங்க மறுத்து, விவசாயிகள் குறைந்த விலைக்கு தனியாருக்கு விற்கும் சூழலை அரசே உருவாக்கி தரகு வேலை பார்ப்பதா என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் நடப்பாண்டில் 1,564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஆட்சியாளர்கள் அறிவித்திருந்தனர். ஆனால், அதில் நான்கில் ஒரு பங்கு கொள்முதல் நிலையங்கள் கூட இன்னும் திறக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 காவிரி பாசன மாவட்டங்களில்தான் அதிக எண்ணிக்கையிலான நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். ஆனால், 3 மாவட்டங்களிலும் சேர்த்து 300 கொள்முதல் நிலையங்கள் கூட இதுவரை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களிலும் முறையாக நெல் கொள்முதல் நடக்கவில்லை.

ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் தினமும் 200 குவிண்டால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யும் பணியாளர்கள், அதற்கு மேல் உழவர்களிடமிருந்து நெல் வாங்க மறுக்கின்றனர். நெல் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவதற்காக கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கூறும் காரணம் நெல் ஈரப்பதமாக இருக்கிறது என்பதுதான். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத வாதம் ஆகும். பொதுவாக, 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் எடுத்துக் கொள்ளப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை வாங்க அதிகாரிகள் மறுப்பதால், வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர்.  தமிழகம் முழுவதும் முறையாக நெல் கொள்முதல் செய்யாமல் தனியார் நெல் வாங்குவதற்கு ஏற்ற சூழலை தமிழக அரசே உருவாக்கிக் கொடுத்து தரகு வேலை பார்ப்பது வேதனை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: