கூவம் உள்ளிட்ட கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கு தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட 2 கோடி அபராதத்திற்கு தடை : உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கூவம், அடையாறு நதிகள் பராமரிப்பு குறித்த வழக்கில் தமிழக பொதுப்பணித்துறைக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த 2 கோடி அபராதத் தொகையை கட்ட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை முறையாக பராமரிக்கவில்லை. இதனால் சுகாதாரக் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளன. நோய் பாதிப்பும் அதிகரித்துள்ளது. மேலும், மழைக்காலத்தில் வெள்ள அபாயத்திற்கும் வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே, கூவம், அடையாறு நதிகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றை முறையாக பராமரிக்குமாறும், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் உத்தரவிட வேண்டும் எனக்கோரி சமூக ஆர்வலர்  ஜவஹர்லால் சண்முகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசு பதில் தருமாறு பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஆதர்ஷ்குமார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 26,300 ஆக்கிரமிப்புகள் உள்ள நிலையில், 408 ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன.  நீதிமன்ற வழக்குகள் காரணமாக மற்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசின் இந்த அறிக்கையை ஏற்க மறுத்த பொதுப்பணித்துறைக்கு 2 கோடி அபராதம் விதித்து  உத்தரவிட்டது. அபராதத்தை 15 நாட்களில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டுமென்றும் கடந்த அக்டோபர் 31ம் தேதி தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக  பொதுப்பணித் துறை செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்திற்காகவும், கேட்ட விவரங்களை அளிக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்திருப்பது தவறானது என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், அனைத்து விவரங்களையும் வழங்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், அதிகபட்சமாக விதிக்கப்பட்ட இந்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கையில் அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கூறி பசுமைத் தீர்ப்பாயம் விதித்த அபராதத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனு குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரரான ஜவஹர்லால் சண்முகம் 4 வாரத்தில் இந்த வழக்கில் பதில் அளிக்கவும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: