ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக பேசிய விவகாரம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும்: ஆணையம் கூறியதாக சசிகலா வழக்கறிஞர் தகவல்

சென்னை: ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் விசாரிப்பதாக ஆணையம் கூறியுள்ளது என்று சசிகலா வழக்கறிஞர் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் அப்போலோ அறுவை சிகிச்ைசப்பிரிவு டாக்டர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், நுரையீரல் சிகிச்சை நிபுணர் நரசிம்மன், பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளர் அலோக்குமார் உட்பட 4 பேர் குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் தனித்தனியாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.  இந்த விசாரணைக்கு பிறகு சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:அப்போலோ டாக்டர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், நரசிம்மன், ஊட்டியை சேர்ந்த வங்கி மேலாளர் உட்பட 4 சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்தோம்.

டாக்டர் நரசிம்மன் ஜெயலலிதாவின் குரலை பதிவு செய்ய டாக்டர் சிவக்குமாரிடம் நான் தான் கூறினேன். அவருக்கு எதனால், மூச்சு திணறல் ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள பதிவு செய்யுமாறு தெரிவித்தேன். ஆனால், அந்த ஆடியோவை கேட்கவில்லை. தொடர்ச்சியாக ஜெயலலிதாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டவுடன் ஐசியு வார்டுக்கு சென்று, அவருக்கு சிகிச்சை அளித்தேன். என்னிடம் ஜெயலலிதா 30 நிமிடம் பேசி கொண்டிருந்தார். ஜெயலலிதா அவரிடம் எனக்கு இருக்கிற ஆஸ்துமா பிரச்னையில் இருந்து மீண்டு வர முடியுமா, நான் எப்போது பணிக்கு திரும்பலாம் என்பது போன்ற பல விஷயங்களை கேட்டேன். எனக்கு ஒரு புத்தகத்தை ஜெயலலிதா பரிசாக அளித்தார் என்று அவர் கூறினார். டாக்டர் ரமேஷ் வெங்கட்ராமன் 4.12.2016 அன்று மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் எப்படி நிகழ்ந்தது, ஜெயலலிதாவுக்கு மூச்சு திணறல் எப்படி ஏற்பட்டது, ஜெயலலிதாவை காப்பாற்ற என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து கூறினார். ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன்  கொடுக்கப்பட்டதாக அமைச்சர் ஒருவர் கூறி வருகிறாரே, நீங்கள் ஜெயலலிதாவுக்கு எடுத்த ரத்த பரிசோதனையில் அப்படி எதுவும் உங்களுக்கு தெரிந்ததா என்பது குறித்து கேட்டோம்.  

இது பொய்யான விஷயம், அவருக்கு இருந்த நோய் காரணமாக தான் மரணம் சம்பவித்தது. ஜெயலலிதா என்ன மாதிரியான உணவு அளிக்கப்பட்டது என்று கேட்டோம். ஜெயலலிதா இரண்டு ஸ்பூன், ஒரு ஸ்பூன் அளவுக்கு தயிர் சாதம், சாம்பார் சாதம், இட்லி, ரவா கிச்சடியை விரும்பி சாப்பிட்டார் என்று கூறினார். அப்போது, டிரக்யோஸ்டமி நோயாளி திட உணவு உட்கொள்ள முடியுமா என்று கேட்டோம். அவர், முடியும் என்று கூறினார்.  ஜெயலலிதாவை தள்ளி விட்டனர் அமைச்சர்கள் கூறி வருகின்றனர். அவர்களிடம் ஆதாரம் இருந்தால் ஆணையத்திடம் வரலாம். அமைச்சர் பதவி பிரமாணம் எடுத்து கொள்ளும் போது, ரகசிய காப்பு எடுத்து கொள்வார். அதை மீறி ஒருவர் செயல்பட்டால் என்ன செய்யலாம். அதன்படி, அவர் மீது கவர்னரிடம் புகார் கொடுக்கப்படும். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை விசாரணைக்கு அழைப்பதாக ஆணையம் கூறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: