எரிபொருள் விலை சரிந்து வரும்போதும் டீசல் கார் வாங்குவது சரியான முடிவா? யோசிக்க வைக்கிறது விலை வித்தியாசம் பெட்ரோலை விட டீசல் 4.13தான் குறைவு

புதுடெல்லி: எரிபொருள் சிக்கனம், அதிக மைலேஜ் காரணமாக பலர் டீசல் கார்களை தேர்வு செய்து வந்தனர். ஆனால், பெட்ரோல், டீசல் விலை வித்தியாசம் குறைந்து வருவது, டீசல் கார் வாங்குபவர்களை ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வைத்துள்ளது.  கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. பிரன்ட் கச்சா எண்ணெய் 70 டாலருக்கு கீழ் வந்துள்ள நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து குறைத்து வருகின்றன. கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து இவ்வாறு விலை குறைக்கப்பட்டு வருகிறது.   சென்னையில் நேற்று பெட்ரோல் 17 காசு குறைந்து    ₹80.56 ஆகவும், டீசல் 16 காசு குறைந்து ₹76.43 ஆகவும் உள்ளது. கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து நேற்று வரை சென்னையில் பெட்ரோல் ₹5.54, டீசல் ₹3.61 குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விலை உயர்த்திய நிறுவனங்கள், குறைப்பதில் வேகம் காட்டவில்லை. பெட்ரோல் விலையை மெதுவாகவும், டீசல் விலையை வேகமாகவும் அதிகரித்து வருகின்றன.

 இதனால், பெட்ரோல் டீசல் இடையே விலை வித்தியாசம் குறைந்து வருகிறது. சென்னையில் நேற்றைய விலையின்படி பெட்ரோல், டீசல் விலை வித்தியாசம் ₹4.13 ஆகிவிட்டது. நாடு முழுவதும் மாநிலங்களின் வாட் வரிக்கு ஏற்ப ₹5 முதல் ₹8 ரூபாய் வித்தியாசம் உள்ளது. டெல்லியில் நேற்று பெட்ரோல் ₹77.56க்கும் டீசல் ₹72.31க்கும் விற்கப்பட்டது. விலை வித்தியாசம் ₹5.25ஆக இருந்தது.  முன்பு பெட்ரோல், டீசல் இடையே விலை வித்தியாசம் ₹29 வரை இருந்தது. அதோடு டீசல் கார்கள் அதிக மைலேஜ் தருபவை. எனவே, அடிக்கடி நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் டீசல் கார்களையே தேர்வு செய்தனர். விலை அதிகம் இருந்தாலும் பெட்ரோல் சிக்கனத்தில் ஈடுகட்டிவிடலாம் என்பதே இதற்கு காரணம்.

ஆனால் தற்போது விலை வித்தியாசம் மிகவும் சுருங்கி விட்டதால் மைலேஜ் அதிகம் கிடைத்தும் பயனில்லையோ என்ற எண்ணமே நுகர்வோரிடம் மேலோங்கி நிற்கிறது.  உதாரணமாக டெல்லியில் நடுத்தர ரக பெட்ரோல் காரின் ஷோரூம் விலை ₹7.76 லட்சம். மாதம் சராசரியாக 22 கி.மீ மைலேஜ் தரும். இதை மாதம் 1500 கி.மீ. ஓட்டினால் மாதாந்திர செலவு ₹5,300 ஆகும். நடுத்தர ரக டீசல் காரின் விலை ₹8.76 லட்சம். 28.4 கி.மீ. மைலேஜ் தரும். இதை மாதம் 1500 கி.மீ. ஓட்டினால் ₹3,827 செலவாகும்.   இதை விட உயர்ந்த ரக பெட்ரோல் கார் டெல்லியில் ஷோரூம் விலை ₹13.69 லட்சம் இது 15.29 கி.மீ. மைலேஜ் தரும். இதை மாதம் 2,000 கி.மீ ஒட்டினால் ₹10,167 செலவாகும். நடுத்தர ரக டீசல் கார் ₹15.17 லட்சம். இது 19.67 கி.மீ. மைலேஜ் தரும். இதை மாதம் 2,000 கி.மீ ஓட்டினால் ₹7,367 எரிபொருள் செலவாகும் என ஒரு பொதுவான கணக்கீடு தெரிவிக்கிறது.

 பெட்ரோல் காரை விட டீசல் கார் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை அதிகம் உள்ளது. குறைந்தது 20 மாதத்துக்கு மேல் மாதந்தோறும் மேற்கண்ட அளவுக்கு ஓட்டினால்தான் ஓரளவு லாபம் கிடைக்கும்.

 டீசல் கார் விலை அதிகம் என்பதால், கடன் இஎம்ஐ, வட்டி தொகையும் அதிகரிக்கும். இதுவும் கூடுதல் சுமை. இதுபோல், சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு டீசல் கார்களுக்கு தடை விதித்ததும் டீசல் கார்  தேவையை குறைத்து விட்டது.  மத்திய அரசின் பாரத் ஸ்டேஜ் விதிகள் அமல்படுத்திய பிறகு டீசல் கார்கள் விலை ₹75,000 அதிகமாகி விட்டது. பெட்ரோல் கார்கள் ₹20,000 மட்டுமே உயர்ந்துள்ளன. எனவே, அடிக்கடி டூர் செல்பவர்கள், வெளியூர் சுற்றுலா வாகனங்கள் இயக்குபவர்களுக்கு மட்டுமே டீசல் கார் பலன் தரும் எனவும், சொந்த உபயோகத்துக்கு எப்போதாவது காரை எடுத்துச் செல்பவர்களுக்கு பெட்ரோல் கார்களே சரியான தேர்வு என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

* பெட்ரோல், டீசல்  இடையே விலை வித்தியாசம் சென்னையில் ₹4.13ஆக குறைந்து விட்டது.

* பெட்ரோல் காரை விட டீசல் கார் சுமார் ₹1 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை அதிகம் உள்ளது. உயர் ரக கார்களில் இந்த விலை மேலும் அதிகம்.

* மைலேஜ்  அதிகம் தரும் என்றாலும் வெளியூர்களுக்கு அடிக்கடி டூர் செல்பவர்களுக்கு  மட்டுமே டீசல் கார் சிறந்த தேர்வாக அமையும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

* முன்பு டீசல் - பெட்ரோல் விலை வித்தியாசம் ₹29 வரை இருந்தது. தற்போது இது 8 ரூபாய்க்கு கீழ் குறைந்து விட்டது.

* பெட்ரோலை விட டீசல் கார்கள் விலை அதிகம் என்றாலும் மைலேஜ் அதிகம்,  எரிபொருள் விலை குறைவு என்பதால் டீசல் கார்களுக்கு மவுசு இருந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: