நவ. 17ல் நட்பு கால்பந்து போட்டி இந்தியா-ஜோர்டான் மோதல்: ஐஎஸ்எல் ஆட்டங்களுக்கு விடுமுறை

சென்னை: இந்திய கால்பந்து அணி சர்வதேச போட்டியில் விளையாட உள்ளதால் ஐஎஸ்எல் 5வது சீசன் தொடரில் 2வது முறையாக மீண்டும் இடைவெளி விடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய கால்பந்து தொடராக மாறியுள்ளது ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக். முந்தைய சீசன்கள் பெரிய இடைவெளி இன்றி 5, 6 மாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், நடப்பு 5வது சீசனுக்கு முழுமையாக போட்டி அட்டவணை வெளியிடப்படவில்லை. அதுமட்டுமின்றி அறிவிக்கப்பட்ட அட்டவணையிலும் 2 பெரிய இடைவெளி உள்ளது. காரணம் ஐஎஸ்எல் அணிகளில் இடம் பிடித்துள்ள பல வீரர்கள் இந்திய அணியிலும் இடம் பெற்றிருப்பதுதான். இந்திய அணி சர்வதேச போட்டிகளில் விளையாட வசதியாக இந்த இடைவெளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சீசனின் முதல் போட்டி செப். 29ம் தேதி கொல்கத்தாவில் நடந்தது. தொடர்ந்து 9 லீக் ஆட்டங்கள் நடந்த நிலையில் அக். 8-16 வரை 9 நாட்களுக்கு இடைவெளி விடப்பட்டது. இந்திய அணி  சீனாவுடன் நட்பு ரீதியிலானபோட்டியில் விளையாடியதே இதற்கு காரணம்.

இந்நிலையில் 2வது முறையாக 34வது லீக் போட்டி முடிந்ததும் மீண்டும் 9 நாட்களுக்கு (நவ. 12-20) போட்டி கிடையாது. இந்தியா - ஜோர்டான் அணிகள் நவ.17ல்  நட்பு ரீதியிலான போட்டியில் மோதுவதால் இந்த இடைவெளி.

அடுத்து ஆசிய கோப்பை தொடரில் (ஜன 5- பிப்.1, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), இந்திய அணி ஜன. 6ம் தேதி தாய்லாந்துடனும், ஜன. 10ம் தேதி ஐக்கிய அரசு எமிரேட்சுடனும், ஜன. 14ம் தேதி  பக்ரைனுடனும் மோத உள்ளது. இதையொட்டி டிச. 16 வரை மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன. ஆசிய தொடரில் லீக் சுற்றுடன் இந்திய அணி விடை பெற நேர்ந்தால்  ஐஎஸ்எல் போட்டி உடனே தொடங்கலாம். ஜன.20-22 வரை நடைபெறும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றால் ஐஎஸ்எல் போட்டி  தள்ளிப்போகும். இந்த முடிவுகளைப் பொறுத்தே ஐஎஸ்எல் அடுத்த கட்ட போட்டி அட்டவணை தயாராகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: