தமிழகத்தில் 8 மாதமாக பட்டுக்கூட்டுக்கு விலையில்லை நஷ்டத்தால் விவசாயிகள் தவிப்பு

கோவை: தமிழகத்திலுள்ள பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை மையத்தில் விவசாயிகளுக்கு கடந்த 8 மாதமாக உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் பட்டுப்புழு வளர்ப்பில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கூடுகளில் மஞ்சள் மற்றும் வெண்மை நிற இனங்கள் உள்ளன. இதில் மஞ்சள் நிற கூட்டின் எடை குறைவாகவும், தரமற்ற நூலாகவும் இருப்பதால் விசைத்தறியில் நூற்பதில் பல்வேறு சிக்கல் உள்ளது. மேலும் மஞ்சள் பட்டுகூட்டில்  நூல் அளவு 800 மீட்டர் வரை மட்டுமே உள்ளது. இதற்கு மாறாக வெண்பட்டுக்கூட்டின் நீளம் 1,200 மீட்டர் இருக்கும். எனவே வெண்பட்டுக்கூடுகளை பெரும்பாலான விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய, பட்டு வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டுக்கூடு விற்பனை நிலையங்கள் தமிழகத்தில் கோவை, சேலம், தருமபுரி, ஓசூர், வாணியம்பாடி, தென்காசி ஆகிய இடங்களில் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரத்து நிலவுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரையிலான 8 மாதத்தில் ஒரு கிலோ பட்டுக்கூட்டின் குறைந்தபட்ச விலை ரூ.150 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.350 ஆகவும், சராசரி விலை ரூ.250 ஆகவும் உள்ளது.  இது கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் சராசரி விலை பாதியாக உள்ளது. ஒரு கிலோ பட்டுக்கூடு உற்பத்தி செய்ய ரூ.400க்கு மேல் ஆகிறது. இதனால் கடந்த 8 மாதமாக விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து கோவை பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநர் முருகானந்தம் கூறுகையில், ‘கடந்த 8 மாதமாக நிலவிய தென்மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழையால், பட்டுக்கூடுகளில் நூலின் அளவு குறைந்துள்ளது. மேலும் உற்பத்தி அதிகரிப்பால், பட்டுக்கூடுகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதில் கோவை விற்பனை கூடத்தில் மட்டும் கடந்த 8 மாதத்தில் கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் கிலோ அதிகரித்துள்ளது. பருவமழை காலம் இம்மாதம் முடிந்து, வரும் டிசம்பரில் பட்டுக்கூடுகளுக்கு சாதகமான சீதோஷ்ணம் நிலவும். அப்போது பட்டுக்கூடுகளின் தரம் உயர்ந்து, விலை உயரும் வாய்ப்புள்ளது.’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: