அனுமதி பெறுவது, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் திட்டங்கள் தாமதம் ஆனதால் மத்திய அரசுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம்

* செலவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு

* அதிகாரிகள் பகீர் தகவல்

புதுடெல்லி: திட்டங்கள் தாமதமானதால் மத்திய அரசுக்கு ரூ.3.39 லட்சம் கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் புதிய திட்ட செலவு அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. அதன்படி கணக்கிட்டால் செலவு அதிகரித்து நஷ்டம் அதிகமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உள்கட்டமைப்பு மேம்பாடு உட்பட பலவற்றுக்கு மத்திய அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதன்படி 1,362 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.17,03,840.01 கோடி. ஆனால், திட்டமிட்டபடி உரிய காலத்தில் இவை முடிக்கப்படவில்லை. இதனால் இவற்றுக்கான செலவு ரூ.20,43,024.21 கோடி ஆகிவிட்டது. அதாவது, திட்ட மதிப்பை விட ரூ.3,39,184.20 கோடி அதிகமாகி விட்டது. இது, முதலில் கணக்கிடப்பட்ட திட்ட மதிப்பில் 19.91 சதவீதம். மேற்கண்டவற்றில் 357 திட்டங்களுக்கு செலவினங்களும், 272 திட்டங்களுக்கு கால அளவும் அதிகரித்துள்ளது. என மத்திய அரசின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. இவற்றுக்கு கடந்த ஜூன் மாதம் வரை ரூ.7,86,754.10 கோடி செலவாகியுள்ளது. இது திட்ட மதிப்பில் 38.51 சதவீதம்.

 அதேநேரத்தில் சமீபத்தில் முடிக்கப்பட்ட திட்டங்களுடன் ஒப்பிடும்போது தாமத திட்டங்களின் எண்ணிக்கை 198 ஆக குறைந்துள்ளது. மேற்கண்ட 272 திட்டங்களில் 65 திட்டங்கள் ஒரு மாதத்தில் இருந்து 12 மாதம் வரை தாமதம் ஆகியுள்ளன. இதுபோல் 53 திட்டங்கள் 13 மாதங்களில் இருந்து 24 மாதங்கள் வரை தாமதம் ஆகியுள்ளன. 74 திட்டங்கள் 25 முதல் 60 மாதங்கள் தாமதம் ஆகியுள்ளன.  80 திட்டங்கள் 61 மாதத்துக்கு மேல் தாமதம் ஆகியுள்ளன.

 மேற்கண்ட திட்டங்களில் பலவற்றுக்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தாமதத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதுபோல் சில திட்டங்கள் வனத்துறை அனுமதி கிடைப்பதில் இழுபறியாலும், சில தளவாடங்கள் சப்ளை செய்யாததாலும் முடங்கிக் கிடக்கின்றன. இதுதவிர, பருவநிலைகள், சிவில் பணிகள் மந்த கதியில் நடைபெறுவது, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், ஒப்பந்ததாரர்களால் ஏற்படும் தாமதம், திட்ட பணிகளுக்கு நிதி கிடைக்காதது அல்லது போதுமான நிதி இல்லாதது, மாவோயிஸ்ட்களால் ஏற்படும் பிரச்னைகள், சட்ட ஒழுங்கு பிரச்னை போன்றவையும் திட்ட பணிகள் தேங்கியதற்கு காரணமாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை, நிதி பற்றாக்குறை, வனத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால்தான் பெரும்பாலான திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மேற்கண்ட திட்ட நிலவரங்கள் குறித்து ஒப்பந்ததாரர்கள் புதிய அறிக்கை அளிக்கவில்லை. அதாவது தற்போதைய நிலையில் ஏற்பட்ட தாமதங்கள், மறு மதிப்பீடு செய்யப்பட்ட திட்ட செலவுகள் விவரங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. அவர்கள் சமர்ப்பித்த பிறகு கணக்கிட்டால் செலவுகள் மேலும் உயர்ந்து நஷ்டம் அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: