வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை கஜா புயல் தாக்குகிறது: வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்

* நாகை - சென்னை இடையே 15ம் ேததி கரை கடக்கிறது

* மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்

சென்னை: ‘கஜா’ புயல் வருகிற 15ம் தேதி முற்பகலில் நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையே கரையை  கடக்கிறது. இதன் காரணமாக வட தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில், இந்திய வானிலை மையம் மிகமிக கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை தற்போது தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. ‘கஜா’ என்று அந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது தற்போதைய நிலவரப்படி புயலாகவே கரையை கடக்கக்கூடும். அது தீவிர புயலாக கூட வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று(நேற்று முன்தினம்) நிலைகொண்டிருந்த  வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(நேற்று) புயலாக வலுப்ெபற்று மாலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 840 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது மேற்கு தென் மேற்கு திசையில் நகர்ந்து நாகப்பட்டினத்துக்கும், சென்னைக்கும் இடையே வருகிற 15ம் தேதி முற்பகலில் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும். காற்றானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகம் வரை இருக்கும். இந்த காற்று நவம்பர் 14ம் தேதி இரவு முதல் வீசத்ெதாடங்கும். அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள் 12ம் தேதி(இன்று) முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12ம் தேதிக்குள்(இன்று) கரைக்கு திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மழையை பொறுத்தவரை வருகிற 14ம் தேதி இரவு முதல் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும். 15ம் தேதி அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இந்த புயலால் சென்னைக்கு மழையை எதிர்பார்க்கலாம். இது தீவிர புயலாக வலுப்பெறும். பிறகு சற்று வலுவிழந்து புயலாக கரையை கடக்கும். சென்னையை பொறுத்தவரை 14, 15ம் தேதி முதல் மழை இருக்கும். காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். வடகடலோர மாவட்டம் மற்றும் புதுவை பகுதியில் காற்று பலமாக வீசும். இந்த புயல் 15ம் தேதி முற்பகல் கரையை  கடக்கும். கடலோர மாவட்டங்களில் முதலில் மழையிருக்கும். அதன் பிறகு உள்மாவட்டங்களில் மழை இருக்கும்.

தற்போதைய நிலவரப்படி 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருந்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு இயல்பாக பெய்யக்கூடிய மழை அளவு 26 சென்டி மீட்டர். பெய்துள்ள மழையின் அளவு 20 சென்டி மீட்டர். இது இயல்பை விட 23 சதவீதம் குறைவு. வடகிழக்கு பருவமழை காலம் என்பது அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் தான். இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் இயல்பு என்பது  சில காலக்கட்டங்களில் வறண்ட காலநிலை காணப்படும். சில சமயங்களில் மழை இருக்கும். இந்திய வானிலை மையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. ஆனால் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகத்திற்கான எச்சரிக்கை கிடையாது. இது நிர்வாகத்திற்காக வானிலை  மையத்தால் தரக்கூடிய ஒரு அறிவிப்பு. சிவப்பு வர்ணம் பூசப்பட்டிருந்ததால் தமிழகத்திற்கான கனமழை என்ற அர்த்தம்  கிடையாது. கவனத்தை ஈர்ப்பதற்காக வர்ணம் அடிப்படையில் சிவப்பு கலர் இடம் பெற்றிருக்கும். இது மழைக்காலம் மட்டுமல்ல, கோடைக்காலத்தில் வெப்பத்திற்காகவும் சிவப்பு வர்ணம் பூசப்படும். இவ்வாறு அவர் கூறினார்.    

தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து  தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வானிலைஆய்வு மையம் புயல் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து பாம்பன், எண்ணூர், கடலூர், புதுச்சேரி, நாகப்பட்டினம், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: