தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் காய்ச்சலை கட்டுப்படுத்த கண்காணிப்பு அலுவலர் நியமனம்

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 37 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த கண்காணிப்பு அலுவலர்களை பொது சுகாதாரத்துறை மூலம் தமிழக அரசு நியமித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு உத்தரவின்பேரில் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் பகுதிகளில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வெளியில் வரும்போது கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையாக அந்த குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் 10 நாட்களுக்கு தடுப்பு மாத்திரைகள் உட்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் உடலில் வேறு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்களுக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டால், அவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆகவே இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெறவேண்டும் எனவும் சுகாதார துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை 17 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்பால் இறந்துள்ளனர். மேலும் 268 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பன்றி காய்ச்சலை தடுக்க தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது 20 லட்சம் மாத்திரைகள் கையிருப்பு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளை தவிர, தனியார் மருத்துவமனைகளிலும் பன்றி காய்ச்சல் தடுப்பு மாத்திரை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் டெங்கு காய்ச்சலுக்கு நில வேம்பு கசாயம் வழங்குவதை போன்று, பன்றி காய்ச்சலுக்கு இந்திய மருத்துவம் ஹோமியோபதி கழகம் அறிவுறுத்தியதின் படி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 15 வகையான மூலிகைகள் அடங்கிய இந்த கபசுர குடிநீர், அரசு சித்த மருத்துவ மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: