உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டம்: பிரதமர் மோடி நாளை வாரணாசியில் தொடங்கி வைக்கிறார்

டெல்லி: உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இயக்கப்படும் முதல் சரக்குக் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் நாளை வரவேற்கவுள்ளார். சரக்குகளை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல பெரும்பாலும் சாலைப் போக்குவரத்து மட்டுமே நம் நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. சரக்கு ரயில் போக்குவரத்தும் பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நிலையில் உலகின் மற்ற நாடுகளை போல நதிகள் வழியாக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்துத் துறையின் பெரிய மைல்கல்லாக கொல்கத்தா துறைமுகத்திலிருந்து புறப்பட்ட ரவீந்திரநாத் தாகூர் எனும் உள்நாட்டு கப்பல் தேசிய நீர்வழிப் பாதை வழியே பயணித்து கொண்டு வருகிறது.

அதில் பெப்சி நிறுவனத்தின் பொருட்கள் அடங்கிய 16 கண்டெய்னர்களுடன் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நாளை இந்தக் கப்பல் வந்தடைகிறது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சரக்கு கப்பலை வரவேற்கவுள்ளார். அதுமட்டுமல்லாது கங்கை நதியின் நான்கு கரைகளையும் இணைக்கும் படகு போக்குவரத்து முனையங்களை அமைக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் குறைந்த செலவில் நீர் வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்க ஜல் மார்க் விகாஸ் என்ற படகு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மேலும் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் கால்வாய்த் திட்டங்களுக்கும்  பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். தற்போது வரை இந்தியாவில் 3.6 சதவீத  அளவு மட்டுமே உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வரும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் இதனை 7 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. சீனாவில் 47 சதவீதமும், ஜப்பான் மற்றும் கொரியாவில் 40 சதவீதமும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வாயிலாக சரக்குகள் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: