5 மாநில சட்டசபை தேர்தல்; நவ. 12 முதல் டிச. 7 வரை கருத்துகணிப்புக்கு தடை: ஆட்சியை பிடிப்பதில் பாஜ - காங். இடையே கடும் போட்டி

புதுடெல்லி: சட்டசபை தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய  5 மாநிலங்களில் வருகிற 12ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதற்கிடையே, மேற்கண்ட மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜ - காங். கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்தில் வருகிற 12ம் தேதியும், 20ம் தேதியும் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் 28ம் தேதியும், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 7ம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பாஜ, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், வரும் 12ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை, அதாவது இறுதிக்கட்ட வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 126 (ஏ)ன்படி, வருகிற 12ம் தேதி காலை 7 மணி முதல் டிசம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிவரை 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக எந்தவிதமான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளையும் வெளியிடுவது தடை செய்யப்படுகிறது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 பிரிவு 126(1)(பி)ன்படி, தேர்தல் தொடர்பாக எந்தவிதமான காட்சிகளையும் வெளிப்படுத்துவது அல்லது மக்களிடம் பெறப்பட்ட கருத்துகளை ஒளிபரப்புவது, ஆய்வுகளை வெளியிடுவது தடை செய்யப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில சட்டசபை தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால், கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எடுத்து வருகின்றன. அதன்படி, சி-வோட்டர்ஸ் என்ற அமைப்பு வெளியிட்ட கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 200 தொகுதிகளைக் கொண்ட  ராஜஸ்தானில் 47.9 சதவீத வாக்குகளுடன் 145 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெறும். பாஜ 39.7 சதவீத வாக்குகளுடன் 45 தொகுதிகளில் மட்டுமே  வெற்றி பெறும். 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 42.3  சதவீத வாக்குகளுடன் 116 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி தனி  பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதேவேளையில், பாஜ 41.5 சதவீத  வாக்குகளுடன் 107 தொகுதிகளைக் கைப்பற்றும். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி 64 தொகுதிகளில் வெற்றி பெறும்.

90 தொகுதிகளைக் கொண்ட சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும்  இடையே கடும் போட்டி நிலவும். காங்கிரஸ் கட்சி 42.2 சதவீத வாக்குகளுடன் 41  தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜவின் வாக்கு சதவீதம் 41.6 ஆக குறையும். எனினும், 43 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெறும். மற்ற  வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெறுவர். மிசோரம் மாநிலத்தில்  எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சி - வோட்டர்ஸ் கருத்து கணிப்புபடி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாஜ அரசு, ஆட்சியை இழக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, சிஎன்எக்ஸ் நிறுவனம் மற்றும் டைம்ஸ் நவ் டிவிக்காக எடுத்த  கருத்து கணிப்பில், ராஜஸ்தானில் காங்கிரசுக்கு 115 இடங்களும், பாஜவுக்கு  75 தொகுதிகளும் கிடைக்கும் என்றும், மத்திய பிரதேசத்தில் பாஜ 122 இடங்களையும், காங்கிரஸ் 95 தொகுதிகளையும் கைப்பற்றும் என்றும், சட்டீஸ்கரில் பாஜ 50 இடங்களையும், காங்கிரஸ் 30 தொகுதிகளையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்களின் கருத்து கணிப்புபடி, மத்தியபிரதேசம், சட்டீஸ்கரில் மீண்டும் பாஜ ஆட்சியும், ராஜஸ்தானில் காங்கிரஸ் பாஜவை தோற்கடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், கருத்துக் கணிப்பு முடிவுகளால் காங்கிரஸ் கட்சி உற்சாகம் அடைந்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘‘ராஜஸ்தானில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெறும். மத்தியப் பிரதேசத்தில் 140 தொகுதிகளிலும், சட்டீஸ்கரில் 50 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். தெலங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும். தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜ ஆகியவை தோல்வியைத் தழுவும். மிசோரமில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும்’’ என்றார். இதுகுறித்து பாஜ கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் சோன்கர் சாஸ்திரி கூறுகையில், ‘‘பாஜ ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜ மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். தெலங்கானாவிலும், மிசோரமிலும் ஆளும் கூட்டணியில் பாஜ அங்கம் வகிக்கும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: