தர்மபுரியில் பஸ்சை கொளுத்தி 3 மாணவிகளை கொன்ற வழக்கு : 3 அதிமுகவினரை விடுவிக்க கவர்னருக்கு 2வது முறையாக கடிதம்

சென்னை: தர்மபுரியில் 3 மாணவிகளை உயிருடன் எரித்து கொன்ற 3 அதிமுகவினரை எம்ஜிஆர் பிறந்த நாளையொட்டி விடுவிக்க வேண்டும் என்று கவர்னருக்கு, தமிழக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கும் அடங்கும். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில் ஜெயலலிதா குற்றவாளி என்றும், ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து மீது அதிமுகவினர் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

அப்போது, கல்லூரி மாணவிகள் பயணம் செய்த பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதில் ஹேமலதா, காயத்ரி, கோகிலவாணி ஆகிய 3 கல்லூரி மாணவிகள் பேருந்துக்குள்ளேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். 16 மாணவிகள் தீக்காயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. மாணவிகளை தீ வைத்து உயிரோடு எரித்த அதிமுகவினரை தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறினர். இதையடுத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், தர்மபுரி நகர முன்னாள் செயலாளர் நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி ரவீந்திரன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முனியப்பன் உள்பட 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றிய வழக்கு விசாரணை முடிவில், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையும், 24 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை பெற்ற 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்றம் 3 பேரின் தூக்கு தண்டனையை 2016ம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைத்தது. இந்த மூன்று பேரும் தற்போது சிறையில் உள்ளனர். இந்த நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இதுவரை 1,600 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், தர்மபுரியில் 3 மாணவிகளை உயிரோடு எரித்து கொன்று ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரையும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. தமிழக கவர்னரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆய்வு செய்துவிட்டு, அரசின் கோரிக்கையை நிராகரித்து கோப்பை கடந்த மாதம் திருப்பி அனுப்பி விட்டார்.

இதனால், 3 மாணவிகளை எரித்து கொன்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்றே பொதுமக்கள் கருதினர். ஆனால், அதிமுகவினர் 3 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு மீண்டும் முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக கவர்னருக்கு மீண்டும் புதிய ஆவணம் ஒன்றை தமிழக அரசு அனுப்பி உள்ளது. அதில், “பஸ் எரிப்பு சம்பவம் திட்டமிட்டு நடந்தது அல்ல. உணர்ச்சிவசப்பட்டு நடந்துவிட்ட ஒன்று என்றும், அதனால் 3 பேரை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது” என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த புதிய பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வாரா? என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனால், கவர்னருக்கு மாநில அரசின் சார்பில் ஒரு கோப்பு அனுப்பி வைக்கும்போது அதை பரிசீலித்து ஒருமுறை திருப்பி அனுப்பும் அதிகாரம் உள்ளது.

ஆனால், அதே கோப்பு 2வது முறை அனுப்பி வைக்கும்போது கவர்னர் அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற ஒரு கருத்தும் கூறப்படுகிறது. இதனால் 3 மாணவிகளை உயிரோடு எரித்து கொன்ற 3 அதிமுகவினரும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றே தெரிகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறும்போது, “3 கல்லூரி மாணவிகளை பேருந்துக்குள் வைத்து உயிரோடு எரித்து கொன்றுள்ளனர். இதுபோன்ற குற்றவாளிகளை எப்படி அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய முடியும். இது, எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி கைதிகளை விடுதலை செய்யும் திட்டத்தை களங்கப்படுத்துவது ஆகும். கவர்னரும், அரசின் இதுபோன்ற ஒரு தவறான முடிவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது” என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: