TAKE CARE

இப்போதெல்லாம் மழை அல்லது குளிர் சீஸன் துவங்குவதற்கு முன்பே புதுப்புது வைரஸ் தொற்றுகள் புதுவித காய்ச்சல்களாய் மாறி அலறவிடுகின்றன. தொண்டைத் தொற்று, வைரஸ் காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு அபாயங்களும் காத்திருக்கின்றன.

குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் இது போன்ற நோய்களின் தொற்றுக்கு எளிதில் ஆளாகிறார்கள்.இந்த மழை காலத்தில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க பின்பற்ற வேண்டிய சில எளிய மாற்றங்கள் உங்களுக்காக இங்கே...

* தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பலரும் காய்ச்சல் தொற்றுக்கு ஆளாகி அவதிப்படுவதைப் பார்க்கிறோம். அதனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்புகளை முதலில் தடுக்க வேண்டும்.

* தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகும் கொசுக்களின் வழியாகத் தான் பலவித காய்ச்சல்களும் பரவுகின்றன. எனவே, உங்கள் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் தேங்கிய தண்ணீர் இருப்பின் அகற்றி விடுங்கள். தண்ணீர் தேங்கும் உடைந்த பொருட்களையும் அப்புறப்படுத்துங்கள்.

* பெரும்பாலான நோய்கள் மழைக்காலத்தில் தண்ணீரின் வழியாகவே பரவுகிறது. காய்ச்சி வடிகட்டிய நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாம். சமைப்பதற்கும் சுகாதாரமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.

* மழைக்காலத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும்போது தண்ணீர் பாட்டில் கையில் இருக்கட்டும். சுகாதாரமற்ற தண்ணீரை வெளியில் குடிக்க நேர்ந்தால் கண்டிப்பாக நோய்த்தொற்றுக்கு வாய்ப்புண்டு.

* சாலையோரக் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளின் வழியாகவும் வைரஸ் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனால், மேலும் அஜீரணக் கோளாறு, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம் என்பதால், வெளியிடங்களில் சாப்பிட நேர்ந்தால் இதுபோன்ற விஷயங்களை கவனித்து சுகாதாரமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்.

* மழையில் நனைவதை அலட்சியமாக நினைக்காமல் மழைக்காலத்தில் வெளியில் செல்லும்போது குடை எடுத்துச் செல்வது அவசியம். இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மழை கோட்டை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

* நனைந்த ஈரத்துடன் அலுவலகம் செல்பவர்கள் மாலை வரை ஈர உடையிலேயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாற்று உடையை பயன்படுத்தி இது போன்ற சங்கடங்களில் இருந்து தப்பிக்கலாம்.

* மழைக்காலமாக இருந்தாலும் போதிய நீர்ச்சத்து உடலுக்கு வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

* சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களை கழுவிப் பயன்படுத்துவதன் மூலமும் கிருமித்தொற்றைத் தடுக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பாத எரிச்சல் பிரச்னை ஏற்படலாம். குளிரால் இப்பிரச்னையின் தீவிரம் அதிகரிக்கக் கூடும். இந்நிலையைத் தவிர்க்க பாதங்களுக்குப் பயிற்சி அவசியம். காலையில் எழும்போதே படுக்கையில் இருந்தபடி பாதங்களை அசைத்து பயிற்சி செய்யலாம்.

* மழையில் நனைந்து விட்டால் உடனடியாக ஈர உடையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதிக நேரம் வெளியில் பயணிப்பவர்கள் கூடுதலாக ஒரு உடையை கையில் வைத்துக் கொள்வதும் உதவியாக இருக்கும்.

* காலையில் சமைத்த உணவை இரவு வரை வைத்திருந்து சாப்பிடுவது மற்றும் ஃபிரிட்ஜில் வைத்த உணவுகள் சாப்பிடுவதையும் இந்த காலத்தில் தவிர்க்கலாம். அந்தந்த வேளைக்கு ஃப்ரஷ்ஷாக சூடாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியம்.

* வழக்கமாக நடைப்பயிற்சி செல்பவர்கள் கூட மழைக்காலத்தில் வெளியில் செல்லாததால் பயிற்சியைத் தவிர்ப்பதுண்டு. உடலையும் மனதையும் உற்சாகமாக வைப்பதில் உடற்பயிற்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மழைக்கு இதமான வெப்பத்தையும் உடற்பயிற்சியின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள்.

* அதிக எடை, மெனோபாஸ் ஆகிய காரணங்களால் ஏற்கனவே மூட்டுகளில் பிரச்னை உள்ள பெண்களுக்கு மழைக்காலத்தில் வலி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. வைரஸ் காய்ச்சல்களால் கை கால் வலி மற்றும் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் சரியான உணவு, மருத்துவ முறைகளை பின்பற்றி வலிகளைக் குறைக்கலாம்.

தொகுப்பு: கே.கீதா

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: