காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை வீரர்களின் அறிவுரையை கேட்காத மக்கள் குண்டுவெடிப்பில் சிக்கினர்: ஏழு பேர் பலி; பலர் காயம்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் சம்பவ இடத்தில் குண்டு வெடித்ததில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தின் லாரூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களை அடையாளம் காண முயற்சிக்கப்படுகிறது.

இதனிடையே, சம்பவ இடத்தில் பொதுமக்கள் உடனடியாக  திரண்டனர்.  ஆனால், அங்கு வெடிப்பொருட்கள் இருக்கலாம் என்றும் முழுமையாக சோதனை நடந்து முடியும் வரை பொதுமக்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும் வீரர்கள் எச்சரித்தனர். ஆனால்,  பொதுமக்கள் இந்த அறிவுறுத்தலை கேட்காமல் வீரர்கள் திரும்பியவுடன், தாக்குதல் நடந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது. இதில், உபத் லாவே என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும், பலர் காயமடைந்தனர். அவர்கள்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாதுகாப்பு படையினர் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வீரர்கள் மீது அவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போராட்டக்காரர்களை தடியடி நடத்தி வீரர்கள் கலைத்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வழக்கமாக, தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றால் அவர்களை எதிர்த்து போராட்டம் நடத்துவது, வீரர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்துவது ஆகியவற்றில் காஷ்மீர் மாநில மக்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்நாத் நாளை பயணம்

காஷ்மீர் மாநிலத்தில் 13 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இதில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் பல நகராட்சிகளிலும், ஜம்மு மாநகராட்சியிலும் பாஜ அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரதமர் மோடி, பாஜ.வுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இம்மாநிலத்துக்கு நாளை ஒரு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்கிறார். அப்போது, மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து கவர்னர் சத்யபால் மாலிக், பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: