இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டால் இருமடங்கு சக்தியுடன் திருப்பி தாக்குவோம்: சுபாஷ் சந்திரபோஸ் விழாவில் பிரதமர் ஆவேசம்

புதுடெல்லி: ‘‘எந்த நாட்டின் நிலத்தின் மீதும் இந்தியா கண் வைத்தது இல்லை. ஆனால் நமது இறையாண்மைக்கு சவால் விடப்பட்டால், இரு மடங்கு சக்தியுடன் திருப்பி தாக்குவோம்’’ என சுபாஷ் சந்திரபோஸ் அறிவித்த ‘இந்திய சுதந்திர அரசு’ 75ம் ஆண்டு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘ஆசாத் ஹிந்த் சர்க்கார்’(இந்திய சுதந்திர அரசு) என்ற அறிவிப்பை கடந்த 1943ம் ஆண்டு, அக்டோபர் 21ம் தேதி வெளியிட்டார். இதன் 75வது ஆண்டு விழா டெல்லி செங்கோட்டையில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சுபாஷ் சந்திர போஸ் தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) இடம் பெற்றிருந்த வீரர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், போஸ் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு, ஐஎன்ஏ.வில் இடம் பெற்ற வீரர் லால்தி ராம், ஐஎன்ஏ.வின் தொப்பியை அணிவித்தார்.

அதன்பின், அந்த தொப்பியுடன் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதாவது: எந்த நாட்டின் நிலப் பகுதி மீதும் இந்தியா ஆசைப்பட்டதில்லை. இது நமது நாட்டின் பாரம்பரியம். ஆனால், நமது இறையாண்மைக்கு சவால் விடப்பட்டால், நாம் இரு மடங்கு சக்தியுடன் திருப்பி தாக்குவோம். இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கு என தனிப் பிரிவை தொடங்க போஸ் முடிவு செய்தார். ஆனால், அவரது விருப்பத்துக்கு அப்போது எதிர்ப்பு கிளம்பியது. அதையும் மீறி அவர் ஜான்சி ராணி படைப்பிரிவை தொடங்கினார். இந்த படைப்பிரிவு இன்று 75ம் ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அனைவருக்கும் சம உரிமை, சம வாய்ப்புகள் கிடைக்கும் இந்தியா  உருவாக்கப்படும் என போஸ் உறுதி அளித்திருந்தார். வளமான இந்தியா  உருவாக்கப்படும் எனவும், பிரித்தாளும் சக்திகள் அகற்றப்படுவர் எனவும் கூறியிருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவரது கனவுகள் நிறைவேறாமல் உள்ளன.

போசின் கனவை நனவாக்க எனது அரசும் முயற்சிகள் எடுத்து வருகிறது. ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகள் குறுகிய கால பணியிலிருந்து நீண்ட காலம் பணியில் நீடிக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமானப் படையிலும் போர் விமானங்களை இயக்கும் பெண் பைலட்கள் இடம்பெற உள்ளனர். முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒரே பதவி, ஒரே பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டு ரூ.11 ஆயிரம் கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

மறக்கடிக்கப்பட்ட தலைவர்கள்

பிரதமர் மோடி பேசுகையில், ‘‘சுதந்திர போராட்டத்தில் ஒரு குடும்பத்தினரின் (நேரு) பங்கை பெரிதுபடுத்துவதற்காக, பல தலைவர்களின் பங்களிப்புகளை மறக்கடிக்கும் முயற்சிகள் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. சர்தார் வல்லபாய் படேல், அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர்தான் அந்த தலைவர்கள். கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் போஸ் கவனம் செலுத்தினார். அதனால், அந்த பகுதிகளுக்கு நீண்ட காலமாக போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது எனது அரசு அங்கு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

நேதாஜி பெயரில் தேசிய விருது

பிரதமர் மோடி மேலும் பேசுகையில், ‘‘தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக் குழுவில் மத்திய மற்றும் மாநில போலீசார் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார், எப்போது மீட்பு பணியில் ஈடுபடுகின்றனர் என்ற விவரம் பலருக்கு தெரியாது. அவர்கள் எல்லாம் காவல்துறையை சேர்ந்தவர்கள். அவர்களின் தைரியம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது. பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்படும் போலீசாருக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் தேசிய விருது இனி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: