இலங்கையில் கைதான மீனவர்களை விடுதலை செய்வதில் சட்ட சிக்கல்: தமிழிசை கைவிரிப்பு

சென்னை:  எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாக கைதாகி ரூ60 லட்சம் அபராதம் மற்றும் சிறை தண்டனை பெற்றுள்ள தமிழக மீனவர்களை மீட்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சபரிமலையில் நடப்பது அரசியல் கட்சிகளின் போராட்டம் அல்ல.  அங்கு நடப்பது பக்தர்களின் போராட்டம்.  குறிப்பாக பெண் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்த போராட்டத்தில் வன்முறையில் பாஜ ஈடுபடவில்லை.

பாஜ சார்பில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அமைப்பாளர்களை ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் நியமித்துவிட்டோம். நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து நாங்கள் விரைவில் முடிவுசெய்வோம். இலங்கை சிறையில் இருக்கும் 8 மீனவர்களளை விடுவிப்பது சம்மந்தமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவர் அந்த 8  மீனவர்களையும் மீட்க நிச்சயமாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

அதே நேரத்தில் 8 மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ60 லட்சம் அபராதம், இலங்கையில் உள்ள உயர் நீதி மன்றம் விதித்த தீர்ப்பு. எனவே இதில் சட்ட பிரச்னைகளும் இருக்கிறது. இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி மீனவர்களை வெளியில் கொண்டுவர முடியாது. எனினும் மத்திய அரசு 8 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை  எடுத்து வருகிறது. நடிகர் கமல்ஹாசன்  காங்கிரஸ்  கூட்டணி அமைப்பதால் நடிகர் ரஜினியோடு பாஜ கூட்டணி அமைப்போம் என்று கூற முடியாது. கமல்ஹாசன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டு சேரட்டும், அதுபற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: