ரூ600 கோடி வங்கி மோசடி செய்த சிவசங்கரன் வெளிநாடு தப்ப சிபிஐ உதவி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் திடுக்கிடும் தகவல்

சென்னை: ரூ600 கோடி வங்கி மோசடியில் தொடர்புடைய தொழில் அதிபர் சிவசங்கரன், வெளிநாடு தப்பிச் செல்ல சிபிஐ உதவி செய்துள்ள திடுக்கிடும் தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல மோசடி தொழில் அதிபர்கள் வெளிநாடு தப்பிச் சென்ற நிலையில், இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்  வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்தவர்  தொழிலதிபர் ஏர்செல் எஸ்.சிவசங்கரன். இவர், ஐடிபிஐ வங்கியில் ரூ600 கோடி மோசடி செய்துவிட்டு  வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். கடந்த 2010 மற்றும் 2014ம்  ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த கடன் மோசடி நிகழ்ந்துள்ளது.  இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பெங்களூருவில் உள்ள  சி.பி.ஐ.யின் அமைப்பான வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு சிறப்பு  பிரிவில் கடந்த ஏப்ரல் 13ம் தேதி இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஏர்செல் முன்னாள் அதிபர் சி.சிவசங்கரன் மற்றும் ஐடிபிஐ தலைவர் மற்றும்  நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.ராகவன், பொதுத்துறை வங்கிகளின் முன்னாள் நிர்வாக  இயக்குநர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளான மெல்வின் ரெகோ, கிஷோர்  காரத், பி.எஸ்.ஷெனாய், மும்பை பங்குச்சந்தை தலைவர் எஸ்.ரவி உட்பட 39 பேர்  மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. பின்னர், இந்த மோசடியில் தொடர்புடையதாக  ஐடிபிஐ செயல் இயக்குநர் பி.ரவீந்திரநாத் மீதும் வழக்கு பதிவு  செய்யப்பட்டது. பெங்களூரு சிபிஐயில், வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி  தடுப்பு பிரிவுதான் வழக்கமாக வங்கி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும்.  ஆனால், சிவசங்கரன் மோசடி வழக்கு இங்கிருந்து திடீரென டெல்லியில் உள்ள ஊழல்  தடுப்பு பிரிவு யூனிட்-3க்கு மாற்றம் செய்யப்பட்டது. மோசடி வழக்கில்  குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துவதுதான் சிபிஐ  அதிகாரிகளின் வழக்கமான செயல்பாடு. ஆனால் சிவசங்கரன் விவகாரத்தில் இதுபோல்  நடக்கவில்லை.

அதாவது, டெல்லி சிபிஐயின் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரி,  கெடுபிடிகள் விதிப்பதற்கு மாறாக, பெங்களூருவில் உள்ள வங்கி மோசடி பிரிவு தலைமை அதிகாரிக்கு விதிகளை மாற்றி அமைத்து, சிவசங்கரன் வெளிநாடு தப்பிச் செல்ல மறைமுகமாக உதவி செய்யும்படி வாய்மொழியாக  சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில், சிவசங்கரன் தேடப்படும்  குற்றவாளி என விமான நிலையங்களில் குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல்  அனுப்பும்போது, அவர் தப்பிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சுற்றறிக்கையை  தயாரிக்குமாறு அந்த டெல்லி உயர் அதிகாரி கூறியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனால் இந்த உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. எனவே,  இந்த  வழக்கில் முக்கிய குற்றவாளிகளை நழுவ விட செய்ய வேண்டும் என்ற  உள்நோக்கத்துடன்தான், பெங்களூரு சிபிஐயில் இருந்து டெல்லியில் ஊழல் தடுப்பு  பிரிவு-3க்கு விசாரணை அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. அங்கிருந்து, விதிகளை  நீர்த்துப்போக செய்யும் வகையில் குடியுரிமை அதிகாரிகளுக்கு அறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு, விதிகளை நீர்த்துப்போகச் செய்ததால்தான்,  தடுக்கப்பட வேண்டியவர் என தெரிந்திருந்தும் குடியுரிமை அதிகாரிகள் தடுத்து  நிறுத்த முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டனர் என கூறப்படுகிறது என்று  டைம்ஸ் ஆப் இந்தியா பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபரான சிவசங்கரன் செஷல்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர்.  இங்கிலாந்து, பின்லாந்து நாடுகளில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த  நிறுவனங்கள் பெயரில்தான் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். இவர் மீது சிபிஐ  வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இவர் வெளிநாடு தப்பிச்சென்று விட்டார்.  ஆனால், சிபிஐ அதிகாரிகள் உதவியால்தான் இவர் தப்பிச்செல்வது சாத்தியமானது.  அதாவது, தேடப்படும் குற்றவாளி என தகவல் அனுப்பிய சிபிஐ, அது  நீர்த்துப்போகும் வகையில் மீண்டும் கடிதம் அனுப்பியதுதான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலை முக்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

வராக்கடன்களால் வங்கிகளின் நிதி நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மத்திய அரசு நிதி அளித்தும் இந்த நிலை மாறவில்லை. இந்த சூழ்நிலையில், வங்கி  மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பிடிக்க வேண்டிய அதிகாரிகளே  வெளிநாடு தப்ப வைக்க  உடந்தையாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், இந்த மோசடி தொழில் அதிபர்தான் புகார்தாரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உதவிய டெல்லி அதிகாரி

வங்கி மோசடி உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் குற்றவாளிகளை தப்ப விட்டது, உடந்தையாக இருந்தது என பல்வேறு புகார்கள், அதிகாரிகள் மீது எழுந்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிபிஐ சிறப்பு இயக்குநர் மீதே லஞ்ச புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா. பண மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் மொயின் குரேஷி வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழு தலைவராக இவர் உள்ளார். இந்த வழக்கில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சானா சதீஷ் என்பவரும் விசாரிக்கப்படுகிறார். இவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், இந்த வழக்கில் சிபிஐ விசாரணையில் இருந்து தப்புவதற்காக ராகேஷ் அஸ்தானாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் முதல் 10 மாதங்களில் ரூ3 கோடியை இடைத்தரகர் மனோஜ் பிரசாத்,  

மூலம் வழங்கியது குறித்து குறிப்பிட்டுள்ளார். ஆனால், சிபிஐ அதிகாரிகள் தன்னை மேலும் பணம் கேட்டு துன்புறுத்தியதால் மேலும் ரூ25 லட்சம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதன்படி ராகேஷ் அஸ்தானா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், தொழில் அதிபர் சிவசங்கரன் வெளிநாடு தப்பிச் செல்ல வசதியாக வழக்கு பெங்களூரில் இருந்து டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டதோடு, விமானநிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு சிவசங்கரன் தப்பிச் செல்ல உதவி செய்யும் வகையில் விதிகளை மாற்றி அமைத்து, தப்பிச் செல்ல உடந்தையாக சிபிஐ அதிகாரி செயல்பட்ட தகவல் வெளியாகியுள்ளது மீண்டும் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திவால் நிறுவனத்துக்கு மீண்டும் கடன் பெற்று மோசடி

ஏர்செல் நிறுவன முன்னாள் தலைவர் சிவசங்கரன் இங்கிலாந்தின் வெர்ஜின் தீவில் செயல்படும் ஆக்சில் சன்ஷைன் லிமிடெட், பின்லாந்து நாட்டில் செயல்படும் வின் விண்ட் ஒய் என்ற நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் டெல்லி, மும்பை உட்பட முக்கிய 10 நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. 2010 அக்டோபரில் இந்த நிறுவனத்துக்கு சென்னை ஐடிபிஐ வங்கி ரூ322.40 கோடி கடன் வழங்கியது. ஆனால், நிறுவன செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டதால், இது திவால் ஆன நிறுவனம் என 2013 அக்டோபரில் பின்லாந்து நீதிமன்றம் அறிவித்தது. இவ்வாறு அறிவித்த பிறகும், 2014ம் ஆண்டு பிப்ரவரியில் ஐடிபிஐயில் ரூ523 கோடி கடனை சிவசங்கரன் வாங்கியுள்ளார். இதில் ரூ600 கோடி வராக்கடனாக மாறியுள்ளது. இந்த வங்கிக்கடன் மோசடி விவகாரம் தொடர்பாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலாளர் பிரவீன் சின்ஹா அளித்த புகாரின்படி பெங்களூருவில் உள்ள வங்கி பாதுகாப்பு மற்றும் மோசடி தடுப்பு பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: