தொடர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எதிரொலி.. பதிவு இல்லாத பணிக்கு செல்ல சார்பதிவாளர்கள் முடிவு: ஐஜியிடம் மனு அளிக்க திட்டம்

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை பத்திரப்பதிவுத்துறையில் தொடர்ந்து கெடுபிடி காட்டுவதாக கூறி பதிவு பணியில் உள்ள சார்பதிவாளர்கள் பதிவு இல்லாத பணிக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ஐஜியிடம் புகார் மனு அளிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 575 சார்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பத்திரம் பதிய வரும் பொதுமக்களிடம் கட்டிடம் மற்றும் நிலத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்றாற்போல் சார்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏராளமான புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்றது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ரெய்டு நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர், சார்பதிவு அலுவலகங்களில் திடீர் ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ஆய்வில் பெரும்பாலான அலுவலகங்களில் பணம் கைப்பற்றப்பட்டு, அவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே நேரத்தில் ஒரு சில சார்பதிவு அலுவலகங்களில் பணம் கைப்பற்றப்பட்டதாக வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் திருப்போரூர், பல்லடம் சார்பதிவு அலுவலகங்களில் பணம் கைப்பற்றப்படாத சூழ்நிலையில், வேண்டுமென்றே லஞ்ச ஒழிப்புத்துறை பணம் கைப்பற்றியதாக நாடகமாடியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக திருப்போரூர் சார்பதிவாளர் சார்பில் வீடியோ ஆதாரம் ஒன்றை பதிவுத்துறை தலைமைக்கு சமர்ப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் சோதனையால் சார்பதிவாளர்கள் பலர் பீதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பதிவுப்பணியில் உள்ள சார்பதிவாளர்கள் பலரும் பத்திரப்பதிவு இல்லாத பணிக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜியிடம் மனு அளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இது குறித்து சார்பதிவாளர்கள் சிலர் கூறும் போது, சார்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர் சோதனை செய்து வருகின்றனர். இந்த ரெய்டின்போது பணம் சிக்காவிடிலும் ஊழியர்களை மிரட்டி பணம் பறிமுதல் செய்வது போன்று வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதை கண்டித்து சார்பதிவாளர்கள் பதிவு இல்லாத பணிக்கு செல்ல முடிவு செய்தோம். மேலும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடமும் புகார் அளிக்கவுள்ளோம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: