பல ஆயிரம் கோடியில் திட்டங்களை நிறைவேற்றும் தமிழக பொதுப்பணித்துறையால் என்ன பயன்? தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எழுப்பிய கேள்வியால் அதிகாரி திணறல்

சென்னை: ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் பணிகளை மேற்கொள்ளும் தமிழக பொதுப்பணித்துறையால் மக்களுக்கு பயன் இருக்கிறதா, இல்லையா என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் எழுப்பிய கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளப்பிரிவு உள்ளது. இதில் கட்டுமான பிரிவு மூலம் வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு புதிய கட்டிடம் கட்டுவது, நீர்வளப்பிரிவு மூலம் ஏரிகள், அணைகள் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ₹4 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தலைமை பொறியாளர் கண்காணிப்பின் கீழ் பொறியாளர்கள் மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு நடந்து வரும் பணிகள் குறித்து வெளிப்படை தன்மை இல்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பொதுப்பணித்துறை இணையதளத்தில் கூட என்னென்ன பணிகள் நடக்கிறது என்பது உள்ளிட்ட எந்த தகவல்களும் இல்லை. மேலும், அதில், பொறியாளர்கள் மொபைல் எண்கள், இமெயில் முகவரி உள்ளிட்ட விவரங்களும் குறிப்பிடவில்லை. இதனால், பொதுப்பணித்துறை சார்பில விடப்படும் டெண்டர் குறித்து என்ன பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது பொதுமக்களால் தெரியாத நிலை தான் இன்றளவும் உள்ளது. இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் 5 கேள்விகள் கேட்டுள்ளார். அதில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்கள், கோட்ட பொறியாளர்கள் எண், இமெயில் முகவரி, விஜிலென்ஸ் அதிகாரி யார் உள்ளிட்ட விவரங்களை கேட்டிருந்தார். அதற்கு பொதுப்பணித்துறை உரிய தகவல் அளித்துள்ளது.

ஆனால் கடைசியாக சமூக ஆர்வலர் கேட்ட கேள்வி பொதுப்பணித்துறை பொது தகவல் அலுவலரையே அதிர்ச்சியடைய வைத்தது. அதாவது, பொதுப்பணித்துறையால் பயன் இருக்கிறதா, இல்லையா என்று கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு பொதுப்பணித்துறையில் பொது தகவல் அலுவலர் அளித்த பதிலில், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று விளக்கம் அளித்திருந்தார். பொதுப்பணித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி செலவில் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த துறையால் பயன் இருக்கிறதா, இல்லையா என்று கேள்வி எழுப்பியிருப்பது பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: