வெள்ளத் தடுப்பு பணியை தடுத்த 2 பேர் கைது

சென்னை: வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை செய்தபோது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை வலை வீசி தேடிவருகின்றனர். தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட சேது நாராயணன் தெரு, பாரதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு பருவ மழையின்போது, வெள்ள நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியதால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மழைக்காலம் என்பதால் அப்பகுதியில் சாலை ஓர மண் கால்வாய் அமைத்து மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வந்தது. நேற்று இப்பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தனியார் தன்னார்வத்தொண்டு அமைப்பை சேர்ந்தவர்கள் நடைபெற்றுகொண்டிருக்கும் வேலைக்கான அளவைக் காட்டும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு அதிகாரிகள் அதை அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் அதிகாரிகளை பணிகள் செய்யவிடாமல் தடுத்தனர். இதையடுத்து சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த பாலசந்தர், சிவகுமார், குமார் சுப்பிரமணியம் ஆகியோர் தங்களை பணிசெய்யவிடாமல் தடுத்து ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றதாக காவல் நிலையத்தில் சிட்லபாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் புகார் செய்தார். சிட்லபாக்கம் போலீசார் 147, 153, 294(பி), 353, 506(1) ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாலசந்தர் (29), குமார் சுப்பிரமணியம் (61) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான சிவகுமாரை தேடிவருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: