தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து இலங்கை பிரதமரிடம் வலியுறுத்தாதது ஏன்? மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி

சென்னை: தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து இலங்கை பிரதமரிடம் இந்தியா வலியுறுத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில் நேற்று நடைபெற்ற இந்திய, இலங்கை பிரதமர்கள் இடையிலான சந்திப்பில், இலங்கை சிறைகளில் அடைபட்டுக் கிடக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்த பேச்சுக்கள் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இந்த சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாட்டு பிரதமர்கள் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை. இந்தியா, இலங்கை இடையிலான பேச்சுக்களின்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விஷயமே மீனவர் பிரச்னை தான். ஆனால், அது குறித்து பேசப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

கடந்த காலங்களில் இலங்கை அதிபரோ, பிரதமரோ இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் போது இரு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால், இம்முறை இலங்கை பிரதமர் விக்கிரமசிங்கே இந்தியா வந்த போது, நல்லெண்ண அடிப்படையில் எந்த மீனவரும் விடுதலை செய்யப்படவில்லை. இலங்கை அரசின் அத்துமீறலில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து இலங்கை சிறையில் வாடும் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: