72 வயது முதியவரை கொன்ற குரங்குகள் எப்ஐஆர் போட்டே ஆகணும்!: மீரட் போலீசை கலங்கடிக்கும் உறவினர்கள்

மீரட்: உத்தரபிரதேசத்தில் குரங்குகள் தாக்கி 72 வயது முதியவர் பலியான சம்பவத்தில், குரங்குகள் மீது எப்ஐஆர் பதியக் கோரி உறவினர்கள் தினமும் போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் அடுத்த திகிரி கிராம பகுதியைச் சேர்ந்தவர் தரம்பால் சிங் (72). இவர், வீட்டின் அருகிலுள்ள வனப்பகுதியில் உள்ள மரங்களின் கீழே கிடக்கும் விறகு மற்றும் சுள்ளிகளை பொறுக்கிக்கொண்டிருந்தார்.  அப்போது கும்பலாக வந்த குரங்குகள், அங்கிருந்த செங்கற்களை கொண்டு தரம்பால் சிங்கை தாக்கி உள்ளன.

 இதில், படுகாயமடைந்த தரம்பால் சிங்கை அவரது உறவினர்கள் மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். ‘எனது சகோதரர் தரம்பால் சிங்கின் இறப்பிற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு பதியும் பொருட்டு, குரங்குகள் மீது எப்ஐஆர் பதிய வேண்டும்’ என, தரம்பால் சிங்கின் தம்பி கிருஷ்ணபால் உள்ளிட்ட உறவினர்கள் டாக்ஹாட் காவல்நிலைய போலீசிடம் புகார் அளித்தனர். போலீசாரும் புகாரை பெற்றுக் கொண்டனர். ஆனால், வழக்கு ஏதும் பதியவில்லை. இருந்தும், முதியவரின் குடும்பத்தினர் குரங்குகள் மீது வழக்குப்பதியக் கோரி போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்து வருகின்றனர்.

இதுகுறித்து, டாக்ஹாட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்வான்சிங் கூறுகையில், ‘‘குரங்குகள் தாக்கி முதியவர் இறந்ததற்கு என்ன வழக்கு போட முடியும்?. குரங்குகள் மீது எப்ஐஆர் போடுங்கள் என்று தொந்தரவு செய்கின்றனர்.  அப்பகுதியில் குரங்குகள் அதிகமாக உள்ளன. வனத்துறையிடம் கூறித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எழுத்துப் பூர்வமான புகாரை மட்டும் வாங்கி பதிவு செய்துள்ளோம். முதியவரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு,  சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்றார.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: