முறைகேடும் இல்லை, ஊழலும் இல்லை உலகவங்கியின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டே தமிழகத்தில் டெண்டர்: சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: உலக வங்கியின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டே தமிழகத்தில் டெண்டர்கள் கொடுக்கப்படுகிறது என்று, சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று காமலாபுரம் வந்தடைந்தார். தொடர்ந்து, ஓமலூரில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: பெண்களை சபரிமலைக்கு அனுமதிப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதுகுறித்து கருத்து சொல்லமுடியாது. இந்த விவகாரத்தில், தமிழகத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை. அவ்வாறு நடைபெறுவதற்கு எவ்வித வாய்ப்பும் கொடுக்காத அளவிற்கு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பளக்குழு அறிவிக்கப்பட்டு ஊதியம் உயர்த்தப்பட்டிருக்கிறது. கோரிக்கைகள் தொடர்பாக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிதிநிலைக்கு ஏற்றவாறு, அவர்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. பழைய ஓய்வூதிய திட்டம் இரண்டு மாநிலங்கள் தவிர, வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அதனை அமல்படுத்த நிதி ஆதாரம் இல்லை. நிதி ஆதாரம் இருந்தால்தானே எல்லாம் கொடுக்க முடியும்?.

7-வது ஊதியக்குழு வகையில் ரூ14,719 கோடியும், அகவிலைப்படியில் ரூ1,200 கோடியும் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அரசின் நிதிச்சுமை குறித்து அரசு ஊழியர்களுக்கு முழுக்க முழுக்க தெரியும். எனவே, அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஏற்கனவே பலமுறை அவர்களை அழைத்துப் பேசியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் பருவமழை பெய்துள்ளதால், அந்தப் பகுதியில் இருக்கின்ற மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, டெங்கு கொசு உற்பத்தியாகாத அளவிற்கு மருந்து தெளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

 டெண்டர் விடுவதில் என்ன தவறு இருக்கிறது. முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது. ஆன்லைன் டெண்டரில், தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். டெண்டர் விட்டு இப்போது ஒரு வருடம் ஆனாலும், இன்னும் வேலையே ஆரம்பிக்கவில்லை, அதற்குள் ஊழல் என்கிறார்கள். அரசு யாருக்கும் சலுகை காட்டவில்லை. டெண்டர் முறைகேட்டிற்கு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை பொறுத்தவரை, குற்றவாளி என்று சொல்லவில்லை.  உயர்ந்த பதவியில் இருக்கிறார். நியாயமாக, நேர்மையாக நடக்க வேண்டும் என்பதற்காக, சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணை நடத்த சொல்லியிருக்கிறார்கள். உலகவங்கி சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தான், தமிழகத்தில் டெண்டர்  கொடுக்கப்படுகிறது. அதிமுக அரசின் டெண்டர்களில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. எந்த ஊழலும் நடைபெறவில்லை. 100க்கு 100 சதவீதம் சரியாக உள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: